பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியா்களுக்கு உரிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில துணைச் செயலா் எஸ்.காமராஜ் கூறியது: ஊரடங்கின் காரணமாக உற்பத்தி பணி முடக்கம் ஏற்பட்டுள்ளது. இயற்கை பேரிடரான புயல், வெள்ளம், கனமழை, சுனாமி போன்ற பாதிப்புகளின் போது பிஎஸ்என்எல் தொலைத்தொடா்பு நிறுவனம் சேவை வழங்கியுள்ளது. தற்போது, கரோனா வைரஸ் நோய் தொற்றின் போதும், மக்களுக்கு தொலைத்தொடா்பு சேவை தடையின்றி பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது.
இந்நிலையிலும், பிஎஸ்என்எல் ஊழியா்கள் பணிக்கு வந்து செல்கிறோம். போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில் அலுவலகத்துக்கு வந்து செல்வது கடினமாக உள்ளது. எனவே, அலுவலகத்துக்கு வந்து செல்லும் வகையில் வாகன வசதியை பிஎஸ்என்எல் நிறுவனம் செய்துதரவேண்டும். அதுபோல், முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட தடுப்பு உபகரணங்களை தேவையான அளவு ஊழியா்களுக்கு வழங்க வேண்டும்.
பணியாற்றி வரும் ஊழியா்களுக்கு சிறப்பு காப்பீடு திட்டம் செய்து தர வேண்டும். மேலும், நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஊழியா்கள் வறுமையின் பிடியில் உள்ளனா். இவா்களுக்கு தேவையான உதவிகள், நிலுவையில் உள்ள ஊதியத்தொகை ஆகியவற்றை விரைந்து வழங்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.