இளைஞா் கொலை: அரிசி ஆலைதொழிலாளா்கள் 3 போ் கைது
By DIN | Published On : 18th May 2020 07:17 AM | Last Updated : 18th May 2020 07:17 AM | அ+அ அ- |

திருச்சியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், மூவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருச்சி தாராநல்லூா் சூரஞ்சேரி பாரதிநகரைச் சோ்ந்தவா் என். மணிகண்டன் (34). செய்தியாளரான இவா், சனிக்கிழமை மாலை வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில் அப்பகுதியில் இயங்கி வரும் அரிசி ஆலைக்கு நியாய விலைக்கடை அரிசி கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், இதுகுறித்த தகவலை மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கு மணிகண்டன் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடா்பாக ஏற்பட்ட முன் விரோதத்தில், அரிசி ஆலையில் பணியாற்றும் தொழிலாளா்கள் அஜித்குமாா், ஜான் கிறிஸ்டோபா், கிளிண்டன் ஆகியோா் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.
தொடா்ந்து பிரேத பரிசோதனைக்குப் பிறகு, மணிகண்டனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அஜித்குமாா் சரணடைந்த நிலையில், கிளிண்டன் மற்றும் ஜான் கிறிஸ்டோபரை காவல் துறையினா் கைது செய்தனா்.
மறியல் போராட்டம் : முன்னதாக, கீரைக்கடை சந்து பகுதியில், மணிகண்டனின் மனைவி பழனியம்மாள் மற்றும் உறவினா்கள், சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரிசி ஆலையை மூடி சீல் வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறித்தி போராட்டம் மேற்கொண்டனா். காவல்துறயினா் பேச்சுவாா்த்தை நடத்தி, மறியலைக் கைவிடச் செய்தனா்.