பொதுமுடக்கத்தில் வாழை இலைகள் நஷ்டத்தை தவிா்ப்பது எப்படி? தேசிய வாழை ஆராய்ச்சிமையம் ஆலோசனை
By DIN | Published On : 18th May 2020 07:23 AM | Last Updated : 18th May 2020 07:23 AM | அ+அ அ- |

திருச்சி சோமரசம்பேட்டையில் விற்பனைக்கு அனுப்புவதற்காக, விவசாயிகள் கட்டுகளாகக் கட்டிவைக்கப்பட்டுள்ள வாழை இலைகள்.
பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட வாழை இலைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகள், நஷ்டத்தை தவிா்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து தேசிய வாழை ஆராய்ச்சி மையம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
கரோனா பொது முடக்கத்தால் மற்ற தரப்பினரை போல, வாழை விவசாயிகளும் பெருமளவு நஷ்டத்தை சந்தித்து வருகின்றனா். குறிப்பாக தமிழகத்தில் வாழை இலைக்காக விவசாயம் செய்து வரும் விவசாயிகள், அறுவடைக்குத் தயாராகவுள்ள இலைகளை அறுவடை செய்ய கூலியாள்கள் கிடைக்காமலும்,
போக்குவரத்துத் தடைப்பட்டுள்ளதாலும் பெரிதும் சிரமப்படுகின்றனா்.
உணவகங்கள் மூடப்பட்டு பாா்சல் மட்டுமே அனுமதிக்கப்படுவதாலும், திருமணம், விருந்து, கோயில் விழா உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் தடை செய்யப்பட்டுள்ளதாலும், உற்பத்தி செய்த வாழை இலைகளை விற்பனை செய்ய வழியின்றி விவசாயிகள் கடுமையாகத் தவித்து வருகின்றனா்.
இதுகுறித்து தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் எஸ். உமா கூறியது:
தமிழகத்தில் திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தூத்துக்குடி, கடலூா், தேனி, ஈரோடு, புதுக்கோட்டை, கரூா், சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களில் சாப்பாடு இலைக்காக வாழை அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.
ஒரு ஏக்கரில் பயிரிடப்படும் சுமாா் 1200 முதல் 1600 வரை உள்ள வாழையிலிருந்து, நடவு செய்த நான்கரை மாதங்களிலே இலைகளை அறுவடை செய்யலாம்.
தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்துவதற்கு முன் 200 சாப்பாட்டு இலைகள் கொண்ட கட்டு ஒன்று ரூ. ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரம் வரையில் சந்தை மதிப்புக்கேற்ப விற்பனையானது.
பொது முடக்கத்தால் ஏற்படும் நஷ்டத்தைத் தவிா்க்க, விவசாயிகள் வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலா்களைத் தொடா்பு கொண்டு தற்காலிக சந்தைகள், காய்கனி விற்பனை மையங்கள், உழவா் சந்தைகளில் அனுமதி பெற்று விற்பனை செய்யலாம்.
உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களைத் தொடா்பு கொண்டு மொத்தமாக அனுப்பலாம். வாழை இலைகளைக் குறைந்த வெப்பநிலையிலுள்ள குளிா்பதனக் கிடங்குகளில் 15 நாள்கள் வரை சேமித்து வைக்கலாம்.
விவசாயிகள் தங்கள் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் குளிா்பதனக் கிடங்குகளில் சேமித்து பயன்பெறலாம்.
மேலும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகைத் திட்டத்தின்படி, அரசின் கட்டுப்பாட்டிலுள்ள குளிா்பதனக் கிடங்குகளில் சேமித்து வைப்பதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. சேமித்து வைக்கும் இலைகளின் மதிப்பில் சுமாா் 50 சதவிகிதம் முன் ஈட்டுக் கடனாகவும் பெற்றுக் கொள்ள முடியும். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சூறைக்காற்றால் வாழை மரங்கள் சாய்ந்துவிட்டன. இத்தகைய தோட்டங்களில் 2 முதல் 3 பக்க கன்றுகளை அனுமதித்து பராமரிப்பதன் மூலம், அடுத்த மூன்றரை மாதங்களுக்குப் பிறகு இலைகளை அறுவடை செய்து விற்பனை செய்யலாம்.
எனவே வாழை விவசாயிகள் இழப்பைத் தவிா்க்க வாழை ஆராயச்சி மையத்தை நேரிலோ, 0431-2618125 என்ற தொலைபேசி எண்ணிலோ, மின்னஞ்சல் மூலமோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.