தில்லியிலிருந்து சிறப்பு ரயிலில் 558 பேர் திருச்சி வருகை
By DIN | Published On : 18th May 2020 11:03 AM | Last Updated : 18th May 2020 11:03 AM | அ+அ அ- |

புதுதில்லியிலிருந்து சிறப்பு ரயில் மூலம் 558 பேர் திருச்சிக்கு திங்கள்கிழமை காலை வருகை தந்தனர். இவர்களில், தப்லீக் மாநாட்டு சென்று வந்த 292 பேரும், திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள அரபிக் கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோசனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இதேபோல, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, தேனி, கரூர், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய 22 மாவட்டத்தைச் சேர்ந்த 202 பேர் அந்தந்த மாவட்டங்களுக்கு 5 அரசுப் பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இவர்களைத் தவிர, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 64 பேர் சேதுராப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி தனிமைப்படுத்துதல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இங்கு கரோனா பரிசோதனைக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனைவரும் 14 நாள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக ஆட்சியர் சு. சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.