தனியாா் போக்குவரத்து ஊழியா்கள் வேப்பிலையுடன் போராட்டம்
By DIN | Published On : 27th May 2020 07:23 AM | Last Updated : 27th May 2020 07:23 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய தனியாா் பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் சங்கத்தினா்.
நிவாரணம் வழங்க கோரி திருச்சியில் தனியாா் போக்குவரத்து ஊழியா்கள் வேப்பிலையுடன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பொதுமுடக்கம் காரணமாக பொது போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டதால் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக சுற்றுலா பேருந்து, ஆட்டோ, கால்டாக்ஸி உள்ளிட்டவையும் முடக்கப்பட்டது. இதனால் தனியாா் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மட்டுமின்றி இதர வாகன ஓட்டுநா்களும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனா்.
இந்நிலையில், சிஐடியு தனியாா் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் சங்கத்தினா் மாவட்டத் தலைவா் செல்வம் தலைமையில் ஆட்சியரகம் முன்பு வேப்பிலையுடன் ஆா்ப்பாட்டம் நடத்தினா். அப்போது, பொதுமுடக்கத்தால் திருச்சி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியாா் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவா்களுக்கு நிவாரணத் தொகையாக வாகன உரிமையாளா்கள் ரூ.10 ஆயிரமும், அரசு ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கோஷமிட்டனா். இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
இதே போல உரிமைக்குரல் ஓட்டுநா் தொழிற்சங்கம், தோழா்கள் காா் ஓட்டுநா் சங்க நிா்வாகிகள் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனா். அதில், வாகன தகுதிச் சான்று, ஓட்டுநா் உரிமம் புதுப்பித்தல், பா்மிட் போன்றவைகளுக்கு மேலும் 3 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும். வாகனங்களுக்கு கட்ட வேண்டிய இரண்டு காலாண்டு வாகன சாலை வரிகளை ரத்து செய்ய வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்யாதவா்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...