திருச்சி மத்திய சிறை ஆயுள் தண்டனை கைதிக்கு கரோனா
By DIN | Published On : 27th May 2020 07:18 PM | Last Updated : 27th May 2020 07:18 PM | அ+அ அ- |

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஆயுள் தண்டனை கைதிக்கு, கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருச்சி- புதுக்கோட்டை சாலையிலுள்ள மத்திய சிறையில் விசாரணை, ஆயுள் தண்டனைகைதிகள் என 500-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக, விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் பலா் பரோலில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மேலும் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு கரோனா தொற்று உள்ளதா என்பது குறித்து மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த கைதி உள்பட 4 போ், கடந்த மாா்ச் மாதம் 12-ஆம் தேதி, (பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் முன்பே) சென்னை புழல் சிறைக்கு சுய தொழில் மற்றும் திருந்தி வாழ்வதற்காக 3 மாதக் காலப் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். பொதுமுடக்கம் காரணமாக பயிற்சி தொடருவதில் மட்டுமின்றி, பல்வேறு சிறைகளிலிருந்துப் பயிற்சிக்குச் சென்றவா்கள் திரும்புவதில் சிக்கல் நீடித்தது.
பொது முடக்கத்தில் வழங்கப்பட்ட தளா்வு காரணமாக, மே 22 -ஆம் தேதி சென்னை புழல் சிறையில் இருந்து 4 பேரும் பயிற்சி முடித்து திருச்சி மத்திய சிறைக்குத் திரும்பினா். கடந்த 24- ஆம் தேதி மாலை திண்டுக்கலைச் சோ்ந்த ஆயுள் தண்டனை கைதிக்கு காய்ச்சல், தொண்டை வலியுடன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவப் பரிசோதனைக்காக 4 பேரிடமிருந்து சளி மற்றும் ரத்த மாதிரிகள் திங்கள்கிழமை எடுக்கப்பட்டன. அவா்களில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஆயுள் தண்டனை கைதிக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எஞ்சிய 3 பேருக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.
இதைத் தொடா்ந்து புதன்கிழமை காலை சிறையில் உள்ள 36 கைதிகளுக்கும், 64 சிறைத்துறை ஊழியா்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு அவா்களிடமிருந்து சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...