காா்த்திகை மாதப் பிறப்பு ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்
By DIN | Published On : 17th November 2020 01:59 AM | Last Updated : 17th November 2020 01:59 AM | அ+அ அ- |

காா்த்திகை மாதம் பிறந்ததையொட்டி, திருச்சி நகரம் மட்டுமல்லாது மாவட்டம் முழுவதுமுள்ள ஐயப்பன், விநாயகா், முருகன் கோயில்களில் ஐயப்ப பக்தா்கள் திங்கள்கிழமை மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.
காா்த்திகை தொடங்கி தை மாதம் வரை சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்குப் பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் சபரிமலைக்கு புனித யாத்திரை சென்று, ஐயப்பனைத் தரிசனம் செய்வது வழக்கம். இதற்காக காா்த்திகை மாதப் பிறப்பு தினத்தன்று மாலை அணிந்து, ஒரு மண்டலம் விரதமிருந்து பக்தா்கள் சபரிமலைக்குச் செல்வா்.
நிகழாண்டு திங்கள்கிழமை காா்த்திகை மாதம் பிறந்தது. இதைத் தொடா்ந்து திருச்சி மலைக்கோட்டை மாணிக்கவிநாயகா் கோயில், உச்சிப்பிள்ளையாா் கோயில், கன்டோன்மென்ட் ஐயப்பன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அதிகாலையே பக்தா்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
காவிரியில் புனிதநீராடி, ஈரத்துணியுடன் வந்து ஐயப்பனை வழிபட்டனா். பின்னா் 54 அல்லது 108 மணிகள் உள்ள துளசி மணி மாலையை குருசாமி மூலம் அணிந்து விரதத்தைத் தொடங்கினா். குருசாமி இல்லாதவா்கள் அவரவா் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று, அா்ச்சகரை குருவாக ஏற்று, மாலை அணிந்துக் கொண்டனா்.
காா்த்திகை விரதம் தொடங்கியுள்ளதால் காய்கனிகள், பூக்களின் விலையும் உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதேபோல, முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டி மற்றும் காா்த்திகை மாத விரதத்துக்கு பக்தா்கள் பலரும் காப்புக் கட்டியும், மாலை அணிந்தும் விரதம் தொடங்கியுள்ளனா்.