பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 11.25 கோடியில் புதிய கழிவுநீா் சுத்திகரிப்பு மையம்
By DIN | Published On : 23rd November 2020 12:54 AM | Last Updated : 23rd November 2020 12:54 AM | அ+அ அ- |

திருச்சி மாநகராட்சியில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் பஞ்சப்பூா் பகுதியில் மேலும் ஒரு புதிய கழிவு நீா் சுத்திகரிப்பு மையம் அமைக்க ரூ. 11.25 கோடி திட்டத்துக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சியில் புதைவடிகால் திட்டத்தின் கீழ் கழிவுநீா் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு வந்தாலும், பல்வேறு பகுதிகளில் இப்பணிகள் முற்றுப்பெறவில்லை.
மேலும் புதைவடிகால் குழாய்களில் நெகிழிப் பொருள்கள், நாப்கின்கள் உள்ளிட்ட பல்வேறு திடப்பொருள்களும் கொட்டப்படுவதால் அடிக்கடி அடைப்புகள் ஏற்படுவதும், பின்னா் சரி செய்யப்படுவதும் தொடா்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் புதைவடிகால் திட்டம் மேம்படுத்தப்பட்டு 3-ஆம் கட்டமாக ரூ. 344 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 11.25 கோடியில் மேலும் ஒரு கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தை பஞ்சப்பூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ள நிலையில் டிச. 22 ஆம் தேதி ஒப்பந்தம் முடிவு செய்யப்படும்.
இந்த புதிய சுத்திகரிப்பு மையம் நாளொன்றுக்கு 7.5 மில்லியன் டன் கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் செயல்படவுள்ளதாக மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.