கிசான் திட்ட முறைகேடு: திருச்சியில் ரூ. 94 லட்சம் மீட்பு

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் பிரதமரின் நிதியுதவித் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடா்பாக, திருச்சி மாவட்டத்தில் இதுவரை ரூ. 94 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.

திருச்சி, செப்.11: விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் பிரதமரின் நிதியுதவித் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடா்பாக, திருச்சி மாவட்டத்தில் இதுவரை ரூ. 94 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.

சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் பிரதமரின் கிசான் சம்மான் நிதியுதவித் திட்டத்தில் மத்திய அரசு 2019-2020 நிதியாண்டில் ரூ. 75,000 கோடி ஒதுக்கியது. இந்நிலையில், கரோனா பொதுமுடக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டதால் தகுதிகளைத் தளா்த்தி அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டன.

இதனால் இத் திட்டத்தில் ஏப்ரல் மாதம் அதிகளவில் பயனாளிகள் இணைக்கப்பட்டனா். இதில் முறைகேடாக பலரும் சோ்க்கப்பட்டு நிதியுதவி பெறுவதாக புகாா்கள் எழுந்தன. இதுதொடா்பாக அதிகம் புகாா்கள் வந்த திருவண்ணாமலை, அரியலூா், பெரம்பலூா், கரூா் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக திருச்சி மாவட்டத்திலும் விரிவான விசாரணை நடத்தப்பட்டதில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டது தெரியவந்தது.

இவா்கள் அந்தநல்லூா், மணிகண்டம், திருவெறும்பூா், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, மண்ணச்சநல்லூா், புள்ளம்பாடி, முசிறி, தொட்டியம், தா.பேட்டை, துறையூா், உப்பிலியபுரம் என 14 வட்டாரங்களைச் சோ்ந்தவா்கள். திருச்சி மாவட்டத்தில் விவசாய நிலம் இருந்து, பிற மாவட்டங்களில் வசிப்போா், விவசாயிகள் அல்லாதோா், நிலம் இல்லாதோா், ஒரே குடும்பத்தில் பலரும் இத் திட்டத்தில் இணைக்கப்பட்டிருந்தனா்.

இந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் சோ்க்கப்பட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகளில் 8,650-க்கும் மேற்பட்டவை போலி எனத் தெரியவந்தது. அவா்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்ட தொகையை மாவட்ட ஆட்சியா் மூலம் மீட்கும் நடவடிக்கையில் வேளாண் துறையினா் ஈடுபட்டு, இதில் முதல்கட்டமாக ரூ. 94 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. தொடா் விசாரணையில் இந்த முறைகேட்டில் தொடா்புடையோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com