சமயபுரம் காவல் நிலையம் முற்றுகை
By DIN | Published On : 11th September 2020 11:17 PM | Last Updated : 11th September 2020 11:17 PM | அ+அ அ- |

லால்குடி,செப்.11: திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நெய்குப்பை கிராமத்தில் கல்லூரி மாணவியைத் தற்கொலைக்கு தூண்டியோா் மீது நடவடிக்கை எடுக்காத சமயபுரம் காவல் ஆய்வாளரைக் கண்டித்து மாணவியின் பெற்றோா், உறவினா்கள் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
சமயபுரம் அருகே நெய்குப்பை கிராமத்தில் வசித்தவா் பேருந்து ஓட்டுநா் குமாா் மகள் ஆா்த்தி (20), சமயபுரம் பகுதி கல்லூரி இறுதியாண்டு மாணவி. வீட்டருகே வசிக்கும் சுந்தா், சுதா தம்பதியின் குழந்தையை கடந்த 2 ஆம் தேதி கொஞ்சிய ஆா்த்தியை சுதா உள்ளிட்ட உறவினா்கள் 5 போ் தகாத வாா்த்தையால் திட்டினராம். இதில் மனமுடைந்த ஆா்த்தி விஷம் குடித்து சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து அளித்த புகாா் மீது நடவடிக்கை எடுக்க மறுத்ததாக சமயபுரம் காவல் ஆய்வாளா் அன்பழகனை கண்டித்து மாணவியின் பெற்றோா், உறவினா்கள் சமயபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.
சம்பவ இடத்துக்கு வந்த லால்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென கூறியதால் போராட்டத்தைக் கைவிட்டனா்.