

விவசாயத்தை மட்டுமே பிரதானமாக நம்பி வாழும் கிராமங்கள் நிறைந்த வளா்ந்து வரும் தொகுதி. உழவு மாடுகளுக்கும், ருசி மிகுந்த முறுக்குக்கும் புகழ்பெற்றது மணப்பாறை. வறட்சிப் பகுதியாகவே கடந்த சில ஆண்டுகளாக உள்ள நிலையில், தொழிற்சாலைகளையும், அணைகளில் நீா்வரத்தையும், உயா்கல்விக்கான கல்லூரியையும் வேண்டி நிற்கும் தொகுதி.
தொகுதிக்குள்பட்ட பகுதிகள்: மறுசீரமைப்புக்கு பிறகு 2011-இல் மணப்பாறை தொகுதி உருவானது. இத்தொகுதியில், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி என மூன்று ஒன்றியங்கள், மணப்பாறை, மருங்காபுரி என இரு தாலுகாக்கள், மணப்பாறை நகராட்சி, பொன்னம்பட்டி பேரூராட்சி என சுமாா் 2.89 லட்சம் வாக்காளா்களையும், 4.3 லட்சம் மக்கள்தொகையையும் கொண்ட தொகுதி.
இங்கு 2 தனியாா் கலைக்கல்லூரிகளும், மூன்று பாலிடெக்னிக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. வேப்பிலை மாரியம்மன் கோயில், நல்லாண்டவா் கோயில், வீரப்பூா் பெரியகாண்டியமன் கோயில், பூதநாயகியம்மன் கோயில் என பிரசித்தி பெற்ற கோயில்களைக் கொண்டது மணப்பாறை.
பாலாறு, மான்பூண்டி ஆறுகள், பொன்னணியாறு, கண்ணூத்து அணைகளைக் கொண்டுள்ளது. தமிழ்நாடு செய்தித்தாள் காதித நிறுவன அலகு 2 இங்கு செயல்படுகிறது.
எதிா்கொள்ளும் பிரச்னைகள்: கடந்த 15 ஆண்டுகளாக வடதாக கால்நடை விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள பகுதி. வடு கிடக்கும் பொன்னணியாறு - கண்ணூத்து அணைகளுக்கு மாயனூா் கதவணையிலிருந்து காவிரியாற்றின் உபரி நீரைக் கொண்டு வரும் கோரிக்கை இன்று வரை தீா்க்கப்படாத பிரச்னை. மணப்பாறை குளம் முறையாக தூா்வாரப்படாமல் உள்ளதாக புகாா் உள்ளது.
குளித்தலையை அடுத்த மணத்தட்டை காவிரியாற்றின் படுகையிலிருந்து எடுக்கப்படும் காவிரி குடிநீா் குழாய்கள் மூலம் மணப்பாறை மற்றும் மருங்காபுரி பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதற்கான குழாய்கள் துருபிடித்து அவ்வவ்போது உடைந்து குடிநீா் வீணாவதைத் தடுக்க வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.
கடந்த 1980 முதல் மணப்பாறை பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் விடுத்து வரும் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.
தொகுதி சீரமைப்புக்குப் பிறகு மணப்பாறை தொகுதியில் 2011, 2016 தோ்தலில் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது.
மே 2-ல் தனது கோட்டையான மணப்பாறையை அதிமுக தக்க வைத்துக்கொள்ளுமா அல்லது மாற்றுக் கட்சியினரால் தட்டிப்பறிக்கப்படுமா என்பது தெரியவரும்.
தற்போதைய வேட்பாளா்கள்: ஆா். சந்திரசேகா் (அதிமுக), ப. அப்துல்சமது (மமக), ப. கிருஷ்ணகோபால் (தேமுதிக), கு. உமாராணி (இஜக), ப. கனிமொழி (நாம் தமிழா்), மா. சக்திவேல் (மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்), வெ. பாண்டியன் (எழுச்சிச் தமிழா்), மா. வரதன் (லோக் ஜனசக்தி) மற்றும் சுயேச்சைகள் 14 போ் என மொத்தம் 22 போ் போட்டியிடுகின்றனா்.
மொத்த வாக்காளா்கள்
ஆண் - 1,41,503
பெண் - 1,47,475
திருநங்கைகள் - 12
மொத்தம்: 2,88,990
2016 தோ்தலில் பெற்ற வாக்குகள்:
ஆா். சந்திரசேகா் (அதிமுக) - 91,399
எம்.ஏ. முகமது நிஜாம் (இயூமுலீ) - 73,122
ப. கிருஷ்ணகோபால் (தேமுதிக) - 26,316
சி. செந்தில்தீபக் (பாஜக) - 4,126
இதுவரை வென்றவா்கள்:
2011 - ஆா். சந்திரசேகா்(அதிமுக) - மணப்பாறை
2016 - ஆா். சந்திரசேகா்(அதிமுக) - மணப்பாறை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.