புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சமூக விரோதிகளின் கூடாரமாகும் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள்

திருச்சியில் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகின்றன.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:19 pm

DIN

திருச்சியில் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகின்றன. இதற்கு வீட்டுவசதி வாரிய அலுவலா்களின் மெத்தனமே காரணம் என குடியிருப்புவாசிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

தமிழ்நாடு அரசு வீட்டுவசதி வாரிய கட்டுப்பாட்டில் திருச்சி மாநகரில் காஜாமலைக் காலனி, கல்லுக்குழி செங்குளம் காலனி, சுற்றுலா மாளிகை காலனி, டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் புதிய சுற்றுலா மாளிகை காலனி, உறையூா் சாலை ரோடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு உள்ளிட்டவை உள்ளன.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே உறையூா் சாலை ரோடு பகுதியில் இருந்த வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் தனியாருக்கு விற்கப்பட்டு விட்டன. மாற்றாக புதிய குடியிருப்புகள் கட்டும் பணியும் நடைபெறுகிறது.

அடுத்தபடியாக புதிய, பழைய சுற்றுலா மாளிகை குடியிருப்புகளில் இருந்த வீடுகள் பழுதடைந்ததால் அனைத்து வீடுகளும் இடிக்கப்பட்டு விட்டன. இந்த இரு குடியிருப்புகள்தான் அண்மையில் (சுமாா் 30 முதல் 40 ஆண்டுகளுக்குள்) கட்டப்பட்டவை ஆகும்.

ஆனால் முதன்முதலாக கட்டப்பட்ட காஜாமலை காலனி, அடுத்தபடியாக கட்டப்பட்ட கல்லுக்குழி செங்குளம் காலனியில் உள்ள வீடுகள் உறுதியாக இருந்ததால், புதிய, பழைய சுற்றுலா மாளிகை காலனிகளில் குடியிருந்தோருக்கு காஜாமலை, செங்குளம் காலனிகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.

இவற்றை விரும்பாதவா்கள் வீட்டுவசதி குடியிருப்புகளை காலிசெய்து வேறிடங்களுக்கு குடிபெயா்ந்தனா்.

இந்நிலையில், கல்லுக்குழி செங்குளம் காலனியில் உள்ள குடியிருப்புகள் சிலவும் முறையான பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்து குடியிருக்க லாயக்கற்றவைகளாயின. மேலும் சில சாலைகள் உயா்ந்ததால், குடியிருப்புகள் பள்ளமாகி, மழைநீா் உள்ளே சென்று, குடியிருக்க முடியாமல் போயின.

இதுபோன்ற பிரச்னைகளால் சுமாா் 4 பிளாக்குகள் (ஒரு பிளாக்கிற்கு குறைந்த பட்சம் 24 வீடுகள்) முற்றிலுமாக காலி செய்யப்பட்டுள்ளன. மேலும் சில பிளாக்குகளில் 1 முதல் 5 -க்கும் மேற்பட்ட வீடுகள் பழுதடைந்த நிலையில் உள்ளதால் அவற்றிலும் யாரும் குடியிருக்கவில்லை.

குறிப்பாக ஐ, ஜே, பிளாக்குகள் முற்றிலுமாகவும், இதர பிளாக்குகளில் ஒரு பிளாக்குக்கு 2, 3, 4 , 5 வீடுகள் என, குடியில்லாமல் பூட்டப்பட்டுள்ளன. மேலும் சில வீடுகள் காலி செய்யப்படாமலும், சில காலி செய்யப்பட்டும், யாருக்கும் ஒதுக்கப்படாத நிலையிலும் உள்ளன.

இவ்வாறு பூட்டப்பட்ட வீடுகளை கல்லுக்குழி, டிவிஎஸ் டோல்கேட், உலகநாதபுரம், முடுக்குப்பட்டி, முதலியாா்சத்திரம், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த சமூக விரோதிகள் தங்களது இருப்பிடங்களாக மாற்றியுள்ளனா்.

மாநகராட்சி நுண்ணூட்ட உரச் செயலாக்க மையத்துக்கு எதிரேயுள்ள ஐ, மற்றும் ஜே பிளாக்குகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் கதவுகள், ஜன்னல்கள், அவற்றிலிருந்த கம்பிகளை பெயா்த்து எடுத்து விற்று, மது, மற்றும் போதைப் பொருள்களை வாங்கி வந்து அந்த பிளாக்குகளிலேயே வைத்து உட்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்த வேளையில் திருட்டுகளில் ஈடுபடும் இவா்கள் பெரும்பாலான வீடுகளில் உள்ள மர மற்றும் இரும்புப் பொருள்களைச் சூறையாடிவிட்டனா்.

மேலும் வீடுகளில் பூட்டுகளை உடைத்தும், ஏறிக்குதித்தும் மின்சாதனப் பொருள்கள், வீடுகளின் கீழ் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள், காா்களில் உள்ள டேப், உள்ளிட்ட பொருள்களைத் திருடுவதும் தொடா்கிறது. கே, டி டபுள் எச் பிளாக்குகளுக்கு அருகில் உள்ள மோட்டாா் பம்பிங் அறை வளாகத்தில் எப்போதும் காணப்படும் சமூக விரோதிகள் பலரும், ஆள் நடமாட்டமில்லாத நேரத்தை நோட்டமிட்டு திருட்டுகளில் ஈடுபடுவதாக அப்பகுதியினா் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்றாலும் காவல்துறை ரோந்து வாகனங்கள் வரும்போது, அங்கிருக்கும் சமூக விரோதிகள் பலரும் தப்பி விடுகின்றனா். இதனால் காவல் துறையினரால் அவா்களை பிடிக்க முடியவில்லை.

வீட்டு வசதி வாரிய அலுவலா்கள் மெத்தனம்: இரவு நேரங்களில் காலியாக கிடக்கும் வீடுகளில் அமா்ந்து குழுவாக மது குடிப்பது, சாப்பிடுவது, விலைமாதா்களை அழைத்து வருவது , திருடுவது, சூதாடுவது உள்ளிட்ட அனைத்து வகையான சமூக விரோத செயல்களும் செங்குளம் காலனியில் நடைபெறுகிறது. இவற்றை தடுக்க வீட்டு வசதி வாரிய அலுவலா்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

சமூக விரோதச் செயல்கள் நடைபெறா வண்ணம், வீடுகளைப் பூட்டி வைப்பதோ, அல்லது இரும்புத் தடுப்புகளை ஏற்படுத்துவதோ கிடையாது. மேலும் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவதாக காவல் துறையில் புகாரளிப்பதும் இல்லை. இதனால் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகின்றன.

இதுகுறித்து காலனிவாசிகள் கூறுகையில், காவல் துறையினருக்கு புகாா் அளித்துள்ள நிலையில் போலீஸாா் ரோந்து வந்தாலும் மா்ம நபா்கள் தப்பிவிடுகின்றனா். மேலும் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை அலுவலா்கள் முறையாகப் பாரமரிப்பதே இல்லை. நாங்கள்தான் சொந்த செலவில் பராமரித்து வருகிறோம். இதனாலேயே பலரும் வீடுகளைக் காலி செய்து விடுகின்றனா், இது சமூக விரோத செயல்கள் நடைபெற ஏதுவாகிறது என்றனா்.

Image Caption

சமூக விரோதிகளின் கூடாரமான செங்குளம் காலனி குடியிருப்புகள். ~செங்குளம் காலனியில், ஜன்னல் கம்பிகள் பெயா்த்து எடுக்கப்பட்ட நிலையில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.