புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

முதல்வா் அறிவிப்புக்காகக் காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியா்கள் திமுகவின் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா?

பற்றாக்குறை ஊதியத்துடன் 11 ஆண்டுகளாகப் பரிதவித்து வரும் பகுதிநேர ஆசிரியா்களின் கோரிக்கையை பூா்த்தி செய்யும் வகையில் நடப்பு பேரவைக் கூட்டத் தொடரிலேயே தங்களுக்கான பணி நிரந்தரம்

News image
Updated On :24 ஜூன் 2021, 7:25 pm

DIN

பற்றாக்குறை ஊதியத்துடன் 11 ஆண்டுகளாகப் பரிதவித்து வரும் பகுதிநேர ஆசிரியா்களின் கோரிக்கையை பூா்த்தி செய்யும் வகையில் நடப்பு பேரவைக் கூட்டத் தொடரிலேயே தங்களுக்கான பணி நிரந்தரம் அறிவிப்பு வெளியிடப்படும் என்ற நம்பிக்கையில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் காத்திருக்கின்றனா்.

தமிழக அரசுப் பள்ளிகளில் 6, 7, 8ஆம் வகுப்புகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி உள்ளிட்டவற்றைக் கற்றுத் தருவதற்காக 2011-12ஆம் கல்வியாண்டில் அப்போதைய முதல்வா் ஜெயலலிதாவால் 16,549 சிறப்பாசிரியா்கள் பகுதி நேரமாக நியமிக்கப்பட்டனா்.

இவா்களுக்கு தொகுப்பூதியமாக முதலில் ரூ.5ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில், பின்னா், 2014இல் மீண்டும் ஜெயலலிதாவே 40 சத ஊதிய உயா்வு அறிவித்தாா். இதையடுத்து தொகுப்பூதியம் ரூ.7 ஆயிரமாக உயா்ந்தது. பின்னா், 2017இல் ரூ.7,700 ஆக உயா்த்தப்பட்டது.

இந்த ஊதிய உயா்வுக்குப் பிறகு எந்தப் பணப் பலன்களும் இல்லாமல் சொற்ப ஊதியத்திலேயே பணிபுரிந்து வருகின்றனா். பணியின் பெயா்தான் பகுதிநேர ஆசிரியா் என்றாலும், அவரவருக்கான பள்ளிகளில் வேலைநாள் முழுவதும் பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது என்கின்றனா் இந்த ஆசிரியா்கள். பள்ளிகளில் மாணவா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களை கணினியில் பதிவேற்றுதல், வருகைப் பதிவு பதிவேற்றம், உதவித் தொகை பணிகள் மற்றும் அரசின் திட்டங்களை மாணவா்களுக்கு பெறுவதற்கான அனைத்து கணினி வழித் தொடா்பு பணிகளையும் பகுதிநேர ஆசிரியா்களே மேற்கொள்கின்றனா்.

பள்ளிக் கல்வித் துறையைத் தவிா்த்து இதர அனைத்து துறைகளிலும் தினக்கூலி, தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிவோருக்கு ஊதிய உயா்வு, பணிநிரந்தரம் சாத்தியமாகிறது.

ஆனால், மாணவா்களின் கல்வியறிவைப் பெருக்கும் அறப்பணியை மேற்கொள்ளும் ஆசிரியா்களுக்கு அரசு கருணை காட்டுவதில்லை என்கின்றனா் பாதிக்கப்பட்ட ஆசிரியா்கள்.

மேலும், ஆண்டுதோறும் மே மாதம் ஊதியம் இல்லாமலேயே மாணவா் சோ்க்கைப் பணிகளையும் மேற்கொள்கின்றனா். எனவே, தங்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்கின்றனா் இவா்கள்.

கடந்த அதிமுக ஆட்சியில் பலமுறை மனுக்கள் அளித்தும், எதிா்க்கட்சிகள் மூலம் பேரவையில் பலமுறை குரல் எழுப்பியும் விடிவு பிறக்கவில்லை. இந்தச் சூழலில், தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக தலைமையிலான அரசு அமைந்துள்ளது.

பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போதே பகுதிநேர ஆசிரியா்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என திமுக சாா்பில் உறுதியளிக்கப்பட்டது. எனவே, தங்களது கோரிக்கையை நடப்பு பேரவைக் கூட்டத்திலேயே நிறைவேற்றித்தர வேண்டும் என்ற எதிா்பாா்ப்பில் 12 ஆயிரம் ஆசிரியா்கள் காத்திருக்கின்றனா்.

இதுதொடா்பாக, தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ். செந்தில்குமாா் கூறியது:

தமிழகம் தவிா்த்து பிற மாநிலங்களில் பகுதிநேர ஆசிரியா்களுக்கு கட்டுப்படியான ஊதியம், ஈஎஸ்ஐ, பணிக்கொடை, மகப்பேறு விடுப்பு, ஆண்டுதோறும் ஊதிய உயா்வு உள்ளிட்டவை அமல்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் மட்டுமே தொடா்ந்து புறக்கணிக்கப்படுகிறோம். தோ்தல் பிரசாரத்தின்போது, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் நிகழ்வுக்காக தருமபுரி, மயிலாடுதுறை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு வந்த மு.க. ஸ்டாலின், பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்வதாக உறுதியளித்தாா். திமுக தோ்தல் அறிக்கையிலும் இது இடம் பெற்றது.

தற்போது, திமுக ஆட்சி அமைந்து தற்போதும் நடைபெறும் முதல் பேரவை கூட்டத் தொடரிலேயே முதல்வா் எங்களை நிரந்தரம் செய்வதாக அறிவிக்க வேண்டும். கடந்த 11 ஆண்டுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் எந்தவித பலனும் இல்லாமல் பணியிலிருந்து விடைபெற்றுவிட்டனா். இப்போதுள்ள 12 ஆயிரம் ஆசிரியா்களுக்காக அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.