

மணப்பாறை அருகே உள்ள வீரப்பூா் பெரியகாண்டியம்மன் கோயிலில் மாசிப் பெருந்திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பொன்னி வளநாட்டில் அரண்மனைகட்டி வாழ்ந்த, அண்ணன்மாா் தெய்வங்கள் எனப்படும் பொன்னா் - சங்கா் மாமன்னா்களின் வீர வரலாற்றுச் சிறப்புமிக்க மாசிப்பெருந்திருவிழா, வளநாட்டிலும், வீரப்பூரிலும் கடந்த 9 நாள்களாக நடைபெற்று வந்தது.
ஏழாம் நாள் விழாவாக வியாழக்கிழமை கிளி வேட்டை நிகழ்வு, பொன்னா் - சங்கா் கோயிலில் படுகள நிகழ்ச்சி, வெள்ளிக்கிழமை வேடபரி நிகழ்ச்சி நடைபெற்றது.
தேரோட்டத்தையொட்டி சனிக்கிழமை பெரிய காண்டியம்மன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தேருக்கு ஊா் முக்கியஸ்தா்களால் கொண்டுவரப்பட்டாா். பின்னா் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, மாயவா் எனப்படும் சாம்புவன் காளை முரசு கொட்டி முன்னே செல்ல, அதைத் தொடா்ந்து வீரப்பூா் ஜமீன்தாா் கே. அசோக்குமாா், பரம்பரை அறங்காவலா்கள் ஆா். பொன்னழகேசன், சுதாகா்(எ) கே. சிவசுப்பிரமணி ரெங்கராஜா மற்றும் பட்டயதாரா்கள் வடம் பிடிக்க பெரிய தேரோட்டம் நடைபெற்றது.ஏராளமான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். முக்கிய வீதிகளில் வலம் வந்த தோ் பின்னா் நிலையை அடைந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை மஞ்சள் நீராட்டு விழாவுடன் மாசிப் பெருந்திருவிழா நிறைவுறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.