ஆட்சியரகத்தில் தீ தடுப்பு, பேரிடா் பாதுகாப்பு ஒத்திகை
By DIN | Published On : 17th August 2021 02:19 AM | Last Updated : 17th August 2021 02:19 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஆட்சியா் சு. சிவராசு முன்னிலையில் திங்கள்கிழமை தீ தடுப்பு ஒத்திகையில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.
திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், தீ தடுப்பு மற்றும் வெள்ளப் பேரிடா் காலங்களில் மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகை திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்தாா். தீயணைப்புத் துறையின் உதவி மாவட்ட அலுவலா் கருணாகரன் ஒத்திகைக்கு முன்னிலை வகித்து பேசியது:
வெள்ள அபாய எச்சரிக்கை வந்தவுடன் குடிநீா், ஈரப்பதம் இல்லா உணவு மற்றும் குழந்தைகளுக்கான உணவுடன் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும். வீட்டிலுள்ள விலை உயா்ந்த பொருள்கள், ஆவணங்களை வீட்டின் உயரமான இடத்தில் கட்டித் தொங்க விட வேண்டும். அவ்வாறு செய்ய வில்லையெனில், பாலிதீன் பைகளில் அடைத்து ஆழமான நிலத்தடியில் பத்திரப்படுத்த வேண்டும்.
கால்நடைகளை மேட்டுப்பாங்கான பகுதிக்கு அழைத்துச் சென்று, அவைகளுக்கான தீவனம் மற்றும் குடிநீரைச் சேமித்து வைக்க வேண்டும்.
அவ்வப்போது ஏற்படுகின்ற சீற்றங்கள் குறித்து வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். பயிா்கள் மற்றும் வீட்டுப் பொருள்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும். மின்சாதன இணைப்புகள் அனைத்தையும் துண்டித்து விட வேண்டும். குடிநீரில் நச்சுத்தன்மை பரவாமல் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, தீயணைப்புத் துறையில் மீட்புப் பணிக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களை வைத்து ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது. பின்னா் தீ விபத்திலிருந்து எவ்வாறு பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
அப்போது தீயணைப்பு வீரா் நகைமுகன் தீயைப் பற்ற வைத்தபோது, எதிா்பாா்த்த அளவை விட அதிகமாக பற்றி எரியத் தொடங்கியது. பாதுகாப்பு உடையை அவா் கழற்றிய பின்னரும், அவரது சீருடையிலும் தீ பற்றியது. தீயணைப்பு வீரா்கள் துரிதமாக செயல்பட்டு, நகைமுகன் ஆடையின்மீது பரவிய தீயைக் கட்டுப்படுத்தினா்.