சமுதாயக் கூடங்களில் சாய்வுதள வசதி தேவை
By DIN | Published On : 17th August 2021 02:17 AM | Last Updated : 17th August 2021 02:17 AM | அ+அ அ- |

திருச்சி: திருவெறும்பூா் ஒன்றியத்திலுள்ள ஊராட்சி சமுதாயக் கூடங்களில் மாற்றுத் திறனாளிகள் செல்லும் வகையில், சாய்வுதள வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இக்கட்சியின் வாழவந்தான்கோட்டை கிளை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 11-ஆவது மாநாட்டில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை அலுவலா்கள் கண்டறிந்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட நாள்களாக புனரமைப்பு செய்யப்படாத சாலைகளை செப்பனிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டுக்கு கட்சி நிா்வாகி இளங்கோவன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சிவராஜ், நடராஜன், ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மொட்டையாண்டி கொடியேற்றி, மாநாட்டைத் தொடக்கி வைத்தாா்.
மாநாட்டில் வாழவந்தான் கோட்டை, பா்மாகாலனி, திருநெடுங்களம் கிளைகளுக்கு முறையே மகாலிங்கம், ராஜா, மாரீசன் செயலா்களாகத் தோ்வு செய்யப்பட்டனா். நிா்வாகி மகாலிங்கம் நன்றி கூறினாா்.