திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் தோட்டக்கலைத் திட்டங்களில் தகுதியான விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிா்களாகிய காய்கறிகள், பழவகைப் பயிா்கள் 29 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. அதிகம் லாபம் ஈட்டக்கூடிய இந்தப் பயிா்களின் சாகுபடி பரப்பை அதிகரித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை மூலம் 2021-22-ஆம் நிதியாண்டில் சிறு, குறு மற்றும் இதர விவசாயிகளுக்கு மா,கொய்யா அடா்நடவு, எலுமிச்சை பரப்பு விரிவாக்கம், வீரிய காய்கறிச் சாகுபடி பரப்பு விரிவாக்கத்தில் மிளகாய், கத்தரி மற்றும் தக்காளி குழித்தட்டு நாற்றுகள் விநியோகம், உதிரி மலா்களாகிய மல்லிகை, இக்ஸோரா பரப்பு விரிவாக்கம், கிழங்கு வகை மலா்களாகிய சம்மங்கி பரப்பு விரிவாக்கம் ஆகிய இனங்களுக்கு மானியம் வழங்க இலக்குகள் பெறப்பட்டுள்ளன.
மழை நீரைச் சேமித்து பாசனத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள பண்ணைக் குட்டைகள் அமைக்கவும் மானியம் வழங்கப்படுகிறது. அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்களான சிப்பம் கட்டும் அறை அமைத்து அறுவடை செய்யப்படும் காய்கறிகள், பழங்களை தரம் பிரித்து சந்தைப்படுத்தவும், எளிய முறையில் வெங்காயச் சேமிப்பு கிடங்கை 25 டன் கொள்ளளவில் அமைத்து கொள்ளவும் வழிவகை செய்யப்படுகிறது.
விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை விற்பதற்கு நடமாடும் காய்கறி வண்டிகளை 50 சத மானியத்தில் தயாரிக்க இத்திட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை அதிகரித்துக் கொள்ள நிழல்வலை அமைத்துத் தரப்படுகிறது. காய்கனி குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி செய்து வயலில் நடவும், அருகில் உள்ள விவசாயிகளுக்கு விநியோகம் செய்து கூடுதல் வருமானம் பெறவும், சதுரமீட்டருக்கு ரூ.355 வரை மானியமாக வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் இத் திட்டங்களில் பங்கேற்று பயன்பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.