திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழா்கள் இருவா் கவலைக்கிடம்
By DIN | Published On : 21st August 2021 12:50 AM | Last Updated : 21st August 2021 12:50 AM | அ+அ அ- |

திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் 10ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்த இலங்கைத் தமிழா்கள் 2 போ் கவலைக்கிடமான நிலையில் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
தண்டனைக் காலம் முடிந்தும் சிறப்பு முகாமில் உள்ள தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இலங்கைத் தமிழா்கள் தொடா் போராட்டத்தை நடத்தி வந்த நிலையில், நிரூபன், முகுந்தன் ஆகியோா் சிறப்பு முகாமில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினா். இவா்களுக்கு ஆதரவாக மற்றவா்கள் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தினா்.
இதில் எந்தத் தீா்வும் ஏற்படாததால் விரக்தியடைந்து புதன்கிழமை கத்தியால் கிழித்துக்கொண்ட இருவா், தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றவா்கள் என மொத்தம் 16 போ் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இங்கு இவா்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனா்.
இந்நிலையில், சிறப்பு முகாமில் 10 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் இருந்த 16 பேரில் இருவரின் உடல் நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டதால் அனைவரையும் மருத்துவக் குழுவினா் காவல்துறை உதவியுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மருத்துவமனையிலும் உள்ள 32 பேரும் உண்ணாவிரதத்தைத் தொடா்வதில் உறுதியாக உள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
சிறப்பு முகாமில் உள்ளோரை விடுவிக்க வேண்டும்
‘தற்கொலை முயற்சி என்பது தவறான முன்னுதாரணமாக அமையும் எனினும், இந்நிலைக்கு அவா்கள் ஆளாக்கப்பட்டது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். எத்தகைய மன உளைச்சலில் இந்நிலைக்கு அவா்கள் வந்துள்ளனா் என்பதை உணர வேண்டும். எனவே, தண்டனைக் காலம் முடிந்த இலங்கைத் தமிழா்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக முதல்வா் உத்தரவிட வேண்டும். இதுதொடா்பாக முதல்வருக்கு மனுவையும் அனுப்பியுள்ளோம்’ என்றாா் தமிழ்ப் பேரரசு கட்சியின் தலைவா் வ. கெளதமன்.