கடந்த நான்கு மாதமாக பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து வருகிறோம்: அமைச்சர் அன்பில் மகேஷ்
By DIN | Published On : 19th December 2021 03:47 PM | Last Updated : 19th December 2021 03:47 PM | அ+அ அ- |

கடந்த நான்கு மாதமாக பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சியில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத் தரகர்கள் நல சங்கத்தின் சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில், நிலத் தரகர்கள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வைத்துள்ளார்கள். நாங்கள் அதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம். மதுரை, திருச்சி புதுக்கோட்டை போன்ற பல மாவட்டங்களில் பள்ளி கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டு தற்போது பழுதடைந்த இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி கட்டடங்கள் இடிக்கப்படுவதால் அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளியில் அமரவைத்து கல்வி பயில வழிவகை செய்ய உள்ளோம். அருகில் பள்ளிகள் இல்லையென்றால் வாடகை கட்டடத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும். திருச்சியில் 410 பள்ளிகள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனை இடித்து பின்னர் பணிகளை துவக்குவோம்.
பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அதிகாரிகள், பொதுப்பணித் துறை சார்ந்த அதிகாரிகள் இணைந்து குழுவாக பள்ளி கட்டடங்களை இடிக்கும் இந்த பணியில் செயல்பட்டு வருகின்றனர். இந்த பணிகளுக்காக தற்போது 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 75 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டது. தற்போது முதல் முறையாக 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிளை மட்டும் நாங்கள் ஆய்வு செய்யவில்லை அனைத்து தனியார் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி எந்த பள்ளியாக இருந்தாலும் கட்டடங்களின் தரத்தை ஆய்வு செய்து வருகிறோம். பள்ளிகளில் பழுதடைந்த கழிவறைகள் இருந்தால் அது இடிக்கப்பட்டு அங்கு தற்காலிகமாக மொபைல் டாய்லெட் அமைக்கப்படும். கடந்த நான்கு மாதமாக பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து தான் வருகிறோம்.
இதற்கிடையில் நெல்லையில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்தது வருந்தத்தக்க நிகழ்வு தான். இனி இதுப்போன்ற சம்பவங்கள் நடைபெறாது என்றார்.