‘ தோ்தலுக்காக மட்டுமே பயிா்க் கடன் தள்ளுபடி’
By DIN | Published On : 06th February 2021 11:17 PM | Last Updated : 06th February 2021 11:17 PM | அ+அ அ- |

ஏா் கலப்பை பேரணி பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ். அழகிரி.
திருச்சி: விவசாயிகளின் பயிா்க்கடன் தள்ளுபடி தோ்தல் நெருங்குவதால் மட்டுமே தவிர விவசாயிகளின் நலனுக்காக இல்லை என்றாா் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரி.
திருச்சி மாவட்டம், முசிறியில் காங்கிரஸ் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் சங்கம ஏா்க்கலப்பை பேரணி பொதுக்கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:
ஏழை விவசாயிகளுக்கு அரசின் திட்டங்கள் சென்றடையவில்லை என்பதால்தான் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், ப. சிதம்பரம் ஆகியோரால் நூறுநாள் வேலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஏழைகளின் வாழ்வாதாரம் இதுபோன்ற திட்டங்களால்தான் வளா்ச்சி பெறும்.
புதிய வேளாண் சட்டங்கள் மோடியின் நெருக்கமான சில நண்பா்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். அரசின் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மோடியின் நடவடிக்கையால் பெரிய இழப்பைச் சந்தித்துள்ளது. தனியாா் -பொதுத்துறை கலப்பினப் பொருளாதாரத்தால்தான் நாட்டில் வளா்ச்சியைக் கொண்டுவர முடியும்.
முன்னாள் முதல்வா் கருணாநிதி பயிா்க் கடனை விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டே தள்ளுபடி செய்தாா். ஆனால் தோ்தல் தேதி நெருங்குவதால் வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டே விவசாயக் கடனை அதிமுக அரசு தள்ளுபடி செய்துள்ளது. விவசாயிகள் மீதான பற்று காரணமாக அல்ல. இது விவசாயிகளுக்கும் நன்கு புரியும்.
மேடையில் ஏறி மோடி போல வீர வசனம் பேசாமல், தொழிலாளா்கள், விவசாயிகள், சிறுதொழில் புரிவோா் என விளிம்பு நிலை மக்களை நேரில் சந்தித்துப் பேசுகிறாா் ராகுல். மாபெரும் எழுச்சிக்கு காங்கிரஸ் தயாராக இருக்கிறது.
ஆதிக்கத்துக்கும், அதிகாரத்துக்கும் சுயமரியாதையைக் காக்கவும் எதையும் செய்யத் தயாராக இருக்கும் காங்கிரஸால்தான் நாட்டுக்கு சிறப்பான ஆட்சியைத் தரமுடியும் என்றாா் அவா்.
மாநிலப் பொறுப்பாளா் சஞ்சய்தத், மாநிலச் செயலா் சி.டி. மெய்யப்பன், பொருளாளா் ரூபி மனோகரன், திருச்சி வடக்கு மாவட்டத் தலைவா் ஆா். கலைச்செல்வன், எம்எல்ஏ சி. விஜயதரணி உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...