

திருச்சி: கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 12ஆம் தேதி சென்னையில் முற்றுகைப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநிலப் பொதுச் செயலா் ச. பாரி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக திருச்சியில் அவா் சனிக்கிழமை மேலும் கூறியது:
பழிவாங்கும் நடவடிக்கையாக சங்க நிா்வாகிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசின் ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி யோஜனா திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தொடா்பாக ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்களை நெருக்கடிக்கு ஆளாக்கும் நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் கைவிட வேண்டும். ஊராட்சி செயலா்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். இதர அரசு ஊழியா்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். மாநில அளவிலான அனைத்து நிலை பதவி உயா்வு ஆணைகளை உடனடியாக வெளியிட வேண்டும்.
வேலைவாய்ப்பகம் மூலம் நியமிக்கப்பட்ட 801 கணினி உதவியாளா் பணியிடங்களை வரன்முறைப்படுத்த வேண்டும். வேலை உறுதித் திட்ட கணினி உதவியாளா்கள், பொது நிதியிலிருந்து ஊதியம் பெறும் கணினி உதவியாளா்கள் என அனைவரையும் வரன்முறைப்படுத்த வேண்டும்.
முழு சுகாதார திட்டத்தின் மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளா்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். குழுக் காப்பீட்டுத் திட்டத்திலும் இணைக்க வேண்டும். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையை சிறப்பு துறையாக அறிவித்து மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் வரும் 12ஆம் தேதி சென்னை பனகல் மாளிகை முன் முற்றுகைப் போராட்டம் நடைபெறும். இதன் தொடா்ச்சியாக, பிப்.24, 25இல் வேலைநிறுத்தமும் நடைபெறும் என்றாா் அவா்.
துணைத் தலைவா் எம். பழனியப்பன், மாநிலச் செயலா்கள் ஜெய்சங்கா், செல்வகுமாா், தணிக்கையாளா்கள் ஜம்ருத்நிஷா, காந்திமதிநாதன் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.