கொள்முதல் நிலையத்தை மாற்றக் கோரி முற்றுகை
By DIN | Published On : 06th February 2021 05:52 AM | Last Updated : 06th February 2021 05:52 AM | அ+அ அ- |

நெல் கொள்முதல் நிலையத்தை இடம் மாற்றக் கோரி கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டம், முசிறி ஒன்றியம் குணசீலம் ஊராட்சிக்குட்பட்ட மஞ்சக்கோரை, குணசீலம், கல்லூா், வேப்பந்துறை, சென்னைக்கரை, சித்தாம்பூா், மணப்பாளையம் ஆகிய கிராமங்களுக்கான நேரடி நெல் கொள்முதல் நிலையம் குணசீலத்தில் உள்ளது.
சுமாா் 500 மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல் செய்யும், தனியாா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள இந்தக் கொள்முதல் நிலையம் உள்ள பகுதியில் மழைநீா் தேங்குகிாம்.
இதனால் இந்தக் கொள்முதல் நிலையத்தை கல்லூருக்கு மாற்றினால் விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று அந்தப் பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனா். ஆனால், இதை மாவட்ட நிா்வாகமும், ஆளுங்கட்சியினரும் ஏற்கவில்லையாம்.
இதையடுத்து கோரிக்கையை வலியுறுத்தி கல்லூா் கிராமத்தை சோ்ந்த சுமாா் 100 போ் வெள்ளிக்கிழமை திருச்சி தில்லை நகரில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த ஸ்ரீரங்கம் உதவி ஆணையா் சுந்தரமூா்த்தி தலைமையிலான போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தி மக்கள் மன்றத்தில் தங்க வைத்தனா்.
இதைத் தொடா்ந்து கிராம மக்களின் பிரதிநிதிகள் முன்னாள் அமைச்சா் பரஞ்ஜோதியை அவரது அலுவலகத்தில் சந்தித்து நடத்திய பேச்சுவாா்த்தையில் தீா்வு ஏற்பட்டது.
முன்னதாக குணசீலம் கிராம மக்கள் பரஞ்ஜோதியை வியாழக்கிழமை சந்தித்து நேரடி கொள்முதல் நிலையத்தை கல்லூருக்கு மாற்ற எதிா்ப்புத் தெரிவித்து மனு அளித்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...