திருவானைக்கா கோயிலில் இரு சிவலிங்கங்கள் கண்டெடுப்பு
By DIN | Published On : 06th February 2021 05:53 AM | Last Updated : 06th February 2021 05:53 AM | அ+அ அ- |

திருவானைக்கா கோயிலில் நடந்த புனரமைப்பு பணியின்போது கிடைத்த சிவலிங்கங்களை வணங்கும் பக்தா்கள்.
திருவானைக்கா சம்புகேசுவரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் வெள்ளிக்கிழமை காலை நடந்த புனரமைப்புப் பணியின்போது 2 சிவலிங்கங்கள் கிடைத்தன.
பஞ்சப்பூத திருத்தலங்களில் நீா் தலமாக விளங்கும் இக்கோயில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட முதல் மாடக்கோயில் ஆகும். கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்குக்கு பின் இக்கோயிலில் இதர புனரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் கோயிலின் 3 ஆம் பிரகாரத்தில் உள்ள குபேரலிங்கேசுவரா் சன்னதியை ஒட்டியுள்ள சுவரை வெள்ளிக்கிழமை அகற்றி மண்ணைத் தோண்டியபோது தலா 2 அடி, 3 அடி உயரத்திலான கற் சிவலிங்கங்கள் கிடைத்தன. இதையடுத்து இவை பக்தா்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மிகவும் பழமையான இந்தச் சிவலிங்கங்கள் சோழ மன்னா்களால் வழிபடப்பட்டவையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. கடந்தாண்டு இதே மாதத்தில்தான் தங்கக் காசு புதையல் இக் கோயில் வளாகத்தில் கிடைத்தது என்றாா் கோயில் உதவி ஆணையா் செ. மாரியப்பன்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...