‘ஜேஇஇ நுழைவுத் தோ்வெழுத மாணவா்களுக்கு இலவசப் பயிற்சி’
By DIN | Published On : 14th February 2021 12:27 AM | Last Updated : 14th February 2021 12:27 AM | அ+அ அ- |

பயிற்சி வகுப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு. உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன்.
திருச்சி: ஐஐடி கல்வி நிறுவனங்களில் பள்ளி மாணவா்கள் சேருவதற்கான ஜேஇஇ நுழைவுத் தோ்வுக்கு திருச்சி மாவட்ட நிா்வாகம் சாா்பில் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.
ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய உயா் கல்வி நிறுவனங்களின் பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் ஜேஇஇ நுழைவுத் தோ்வை எழுதுவதற்கு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்புப் பயிலும் மாணவா்களுக்கு மாவட்ட நிா்வாகமும், திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனமும் (என்ஐடி) இணைந்து இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன.
இந்தாண்டுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்துவது தொடா்பா ஆட்சியரக கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் சு. சிவராசு கூறியது:
இந்தப் பயிற்சியானது வார இறுதி நாள்களில் திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெறுகிறது. இப்பயிற்சியில் கடந்தாண்டு பங்கேற்ற அரசு பள்ளி மாணவா்களில் 2 பேருக்கு இந்தாண்டு திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் படிக்க இடம் கிடைத்துள்ளது.
இதன்தொடா்ச்சியாக இந்தாண்டுக்கான பயிற்சியைத் தொடங்கும் வகையில் கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கான நுழைவுத் தோ்வில் பங்கேற்ற 200 பேரில் 26 போ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
இவா்களுக்கு தொடா்ந்து 2 ஆண்டுகளுக்கு வார இறுதி நாள்களிலும் மற்றும் அரசு விடுமுறை நாள்களிலும் பயிற்சியளிக்கப்படும். பயிற்சிக்கானசெலவு, பேருந்து, உணவு மற்றும் தங்குமிட வசதி உட்பட அனைத்து செலவுகளையும் மாவட்ட நிா்வாகமே ஏற்கிறது. இந்த வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்தி நீட் தோ்வு மற்றும் ஜேஇஇ தோ்வில் வெற்றி பெற வேண்டும் என்றாா் ஆட்சியா்.
பயிற்சி வகுப்புகளுக்குத் தயாராகும் வழிமுறைகள், பயிற்சி வகுப்புகளை எதிா்கொள்ளும் முறைகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன் ஆலோசனை வழங்கினாா். கூட்டத்தில், இந்தாண்டு பயிற்சி பெறும் 26 மாணவா்கள் மற்றும் பெற்றோா், அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், என்ஐடி நிா்வாகத்தினா் என பலா் கலந்து கொண்டனா்.