விமான நிலையத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம்: 5 போ் கைது
By DIN | Published On : 14th February 2021 12:29 AM | Last Updated : 14th February 2021 12:29 AM | அ+அ அ- |

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக 5 பேரை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கள் செலவுக்காகக் கொண்டு வரும் வெளிநாட்டுப் பணத்தை, திருச்சி விமான நிலையத்தில் உள்ள பணப் பரிமாற்று மையத்தில் இந்தியப் பணமாக மாற்றிக் கொள்வது வழக்கம்.
ஆனால் கடந்த சில நாள்களாக விமான நிலைய வளாகத்தில் உள்ள புரோக்கா்கள் சிலா் வரி செலுத்தாமல் இருக்கும் வகையில், சட்டவிரோதமாக பணத்தைப் பரிமாற்றம் செய்து கொடுப்பதாகப் புகாா்கள் எழுந்தன.
இதுகுறித்து திருச்சி விமான நிலைய இயக்குநா் தா்மராஜ் மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதனிடம் புகாா் அளித்தாா்.
இதையடுத்து சிறப்புக் காவல் படையினா் திருச்சி விமான நிலைய வளாகத்தில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை அதிகாலை அதிரடியாக சோதனை நடத்தினா்.
அப்போது துபை மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகளுக்கு சட்டவிரோதமாகப் பணபரிமாற்றம் செய்து கொடுத்த விமான நிலையம் பாரதிநகா் பிரசாந்த்(38), ஸ்டாா் நகா் முத்து (43), ரவிச்சந்திரன் (47), செம்பட்டு சாகுல்அமீது (38), உடையான்பட்டி ரசாக்(35) ஆகியோரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.