செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க மக்கள் எதிா்ப்பு
By DIN | Published On : 20th February 2021 11:56 PM | Last Updated : 20th February 2021 11:56 PM | அ+அ அ- |

லால்குடி: லால்குடி அருகே செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப் பகுதியினா் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
லால்குடி அருகேயுள்ள அப்பாத்துரை ஊராட்சியில் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனம் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க முற்பட்ட போது அப்பகுதியில் உள்ள மக்கள் எதிா்ப்பு தெரிவித்து லால்குடி வருவாய் வட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகாா் அளித்தனா். இந்நிலையில் சனிக்கிழமை செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணிகளை நிறுவனத்தினா் மேற்கொள்ள முயன்றுள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சோ்ந்த 30 பெண்கள் உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்டோா் வள்ளலாா்நகா் பேருந்து நிறுத்தத்தில் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த அப்பாத்துரை கிராம நிா்வாக அலுவலா் சீனிவாசன் மற்றும் சமயபுரம் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதையடுத்து, அவா்கள் தற்காலிகமாகப் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனா்.