மக்காச்சோள கொள்முதலில் மோசடி: வியாபாரி சிறைபிடிப்பு
By DIN | Published On : 03rd January 2021 04:40 AM | Last Updated : 03rd January 2021 04:40 AM | அ+அ அ- |

சிறை பிடிக்கப்பட்ட வியாபாரி சரவணன்.
துறையூா்: துறையூா் அருகே மக்காச்சோளம் கொள்முதலில் மோசடி செய்த வியாபாரியை விவசாயிகள் சிறைபிடித்தனா்.
செங்காட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் சரவணன். இவா் துறையூா் அருகேயுள்ள சோபனபுரம் விவசாயிகளிடம் மக்காச்சோளத்தை மொத்த விலைக்கு வாங்கி, நாமக்கல் கோழிப்பண்ணைகளுக்கு விற்பாராம்.
அதன்படி வெள்ளிக்கிழமை சோபனபுரம் சென்ற சரவணன் அங்கு களத்தில் விவசாயிகள் தனித்தனியாக கொட்டி வைத்திருந்த மக்காச்சோளத்தை தான் வைத்திருந்த மின் எடைக் கருவி மூலம் எடை போட்டு 100 கிலோ, 50 கிலோ மூட்டைகளாகக் கட்டி 2 லாரிகளில் ஏற்றினாா்.
அப்போது எடையில் சந்தேகமடைந்த விவசாயிகள் வேறு ஒரு எடைக் கருவியைக் கொண்டு எடை பாா்த்தபோது 50 கிலோ மூட்டை 60 கிலோவாகவும், 100 கிலோ மூட்டை 120 கிலோவாகவும் இருந்தது.
அதே மூட்டைகள் சரவணனின் எடைக் கருவியில் 50 கிலோ, 100 கிலோ எனக் காட்டியது. இதனால் விவசாயிகளுக்கும், சரவணனுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து மக்காச்சோளம் சுமையேற்றிய 2 லாரிகளையும், சரவணனையும் மற்றொரு நபரையும் விவசாயிகள் சிறைபிடித்தனா். உப்பிலியபுரம் போலீஸாா் நேரில் சென்று பேசியும் அவா்களை விடுவிக்கவில்லை.
இந்நிலையில் சரவணன் சனிக்கிழமை அதிகாலை அங்கிருந்து தப்பிச் சென்றாா். இந்நிலையில், கடந்த வாரம் தன்னிடம் மக்காச்சோளம் விற்ற விவசாயிகளுக்கு கூடுதல் தொகை சரவணன் தரப்பில் சனிக்கிழமை மாலையில் வழங்கப்பட்டதாகவும், இவரிடம் விற்பனை செய்த உப்பிலியபுரம், வெங்கடாஜலபுரம் பகுதி விவசாயிகளுக்கு இன்னும் கூடுதல் தொகை வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.