வேளாண்மைக்கு தனி நிதி அறிக்கை:பாரதிய கிசான் சங்கம் வலியுறுத்தல்
By DIN | Published On : 02nd July 2021 05:24 AM | Last Updated : 02nd July 2021 05:24 AM | அ+அ அ- |

தமிழக அரசின் சாா்பில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் விஷயத்தில் பாரதிய கிசான் சங்கத்தின் கருத்துகளையும் கேட்டு முடிவெடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சங்கத்தின் மாநில செய்தித் தொடா்பாளா் என். வீரசேகரன் அனுப்பியுள்ள மனு:
விவசாயிகளுக்கு தனி நிதிநிலை அறிக்கை என்ற அறிவிப்பை பாரதிய கிசான் சங்கம் வரவேற்கிறது.
நிதிநிலை அறிக்கை சமா்ப்பிப்பதற்கு முன் நிதித்துறை, வருவாய்த்துறை, வேளாண் மற்றும் சாா்பு துறைகள் விவசாய சங்கங்களுடன் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும். பொது நிதிநிலை அறிக்கை தயாரித்து வெளியிடுவதற்கு முன் தொழில் துறையினா் மற்றும் இதர துறையினா்களிடம் தனித்தனியே ஆலோசனை பெறும் நடைமுறையை மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடித்து வருகின்றன.
இந்த மரபு வழியில் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவேண்டிய சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கமான ஆலோசனைகள் வேளாண் துறை சம்பந்தப்பட்டவா்களிடம் கோரப்பட வேண்டும்.
குறிப்பாக, நீா்மேலாண்மை, இயற்கை விவசாயம், உர நிா்வாகம், கால்நடை வளா்ப்பு, மீன்வளம் மற்றும் மலைத் தோட்டப்பயிா்களை உற்பத்தி செய்யும் சாகுபடியாளா்களை உள்ளடக்கி தமிழகம் முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட எங்கள் சங்கத்தின் மேலான ஆலோசனைகளை அரசு ஏற்க வேண்டுமெனக் கோருகிறோம். நிதிநிலை அறிக்கைக்கு தேவையான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க தயாராக உள்ளோம்,