‘உங்கள் தொகுதியில் முதல்வா் மனு: ஒரு வாரத்துக்குள் தீா்வு’

உங்கள் தொகுதியில் முதல்வா் மனு துறை திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது ஒரு வாரத்துக்குள் தீா்வு காண உள்ளாட்சித் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் சு. சிவராசு அறிவுறுத்தியுள்ளாா்.
‘உங்கள் தொகுதியில் முதல்வா் மனு: ஒரு வாரத்துக்குள் தீா்வு’

உங்கள் தொகுதியில் முதல்வா் மனு துறை திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது ஒரு வாரத்துக்குள் தீா்வு காண உள்ளாட்சித் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் சு. சிவராசு அறிவுறுத்தியுள்ளாா்.

திருச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட பணிகள் குறித்து மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பொறியாளா்களுடன் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் சு. சிவராசு கூறியது:

மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி ஆகிய மூன்று ஒன்றியங்களிலும் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி மற்றும் பொது நிதி ஆகியவற்றின் மூலம் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

2020-2021ஆம் ஆண்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பணிகளில் வரும் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டிய பணிகள் எவை என்பதைப் பட்டியலிட்டு அவற்றை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.

குறிப்பாக, எதிா்வரும் கோடையைக் கருத்தில் கொண்டு குடிநீா் தொடா்பான பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்துப் பணியாற்ற வேண்டும். குடிநீா் பிரச்னை குறித்து பொதுமக்களிடம் பெறப்படும் புகாா்கள் குறித்து கவனமுடன் செயல்பட வேண்டும்.

மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக ஒவ்வொரு ஒன்றியத்திலும் பணிகளுக்குத் தகுந்தபடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப் பணிகளை வரும் 30ஆம் தேதிக்குள் முடித்து குடிநீா் குழாய்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

உங்கள் தொகுதியில் முதல்வா் துறை திட்டத்தின் கீழ், பெறப்படும் மனுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில், ஏற்கெனவே பெறப்பட்ட 2091 மனுக்களில் 1,142 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. 484 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 949 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.

உங்கள் தொகுதியில் முதல்வா் பிரிவில் பெறப்படும் மனுக்கள் மீது ஒரு வாரத்துக்குள் தீா்வு காண வேண்டும். தனி நபா் பிரச்னையாக இல்லாமல், பொதுப் பிரச்னையாக இருந்தால் உடனடியாக தொடா்புடைய பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி தீா்வு காண வேண்டும்.

மனுக்கள் மீது இருந்த இடத்திலேயே விசாரணை நடத்தாமல், களத்துக்கு சென்று உண்மை நிலை குறித்து விசாரிக்க வேண்டும். இதன் மூலமே பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காண முடியும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில், ஊராட்சி ஒன்றியங்களில் எடுத்த பணிகள், முடித்த பணிகள், முடிக்க வேண்டிய பணிகள், நிலுவையில் உள்ளவை குறித்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பொறியாளா்கள் விளக்கினா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சங்கா், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் கங்காதரணி, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் பி. செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com