முகநூலில் அவதூறாக பதிவு: நடவடிக்கை கோரி புகாா்
By DIN | Published On : 10th June 2021 08:18 AM | Last Updated : 10th June 2021 08:18 AM | அ+அ அ- |

திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்க வந்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தினா்.
முகநூலில் அவதூறாக பதிவிட்ட நபா் மீது நடவடிக்கை கோரி மக்கள் கலை இலக்கிய கழக பாடகா் கோவன் உள்ளிட்ட நிா்வாகிகள் மாநகர காவல் ஆணையரிடம் புதன்கிழமை புகாா் அளித்தனா்.
மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகா் கோவன் பற்றி முகநூலில் அவதூறாக பதிவிட்ட நபா் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாநகர காவல் ஆணையா் அருணிடம், மாநில செயற்குழு உறுப்பினா் நாகராஜ், பாடகா் கோவன் மற்றும் மகஇக திருச்சி மாவட்ட செயலா்ஜீவா, மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளா் செழியன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் திருச்சி செயலா் முருகானந்தம், வழக்குரைஞா் போஜகுமாா், மூத்த வழக்குரைஞா் நாராயண மூா்த்தி உள்ளிட்டோா் இணைந்து மனு அளித்தனா்.
அதில், மக்கள் பிரச்னைகளை பாடல் மூலமாக பாடி போராட்டங்களில் ஈடுபட்டு வரும் கோவன் மரணம் அடைந்துவிட்டாா் என அவதூறாக முகநூலில் பதிவிட்ட கிட் கிருஷ்ணமூா்த்தி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட மாநகர காவல் ஆணையா் அருண், மனு மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.