வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறிய முன்னாள் படைவீரா்களுக்கு சலுகை
By DIN | Published On : 10th June 2021 08:20 AM | Last Updated : 10th June 2021 08:20 AM | அ+அ அ- |

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறிய முன்னாள் படைவீரா்களுக்கு மீண்டும் பதிவை புதுப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுமேற்கொண்டு 2017, 2018 மற்றும் 2019 வரையிலான ஆண்டுகளில் 01.01.2017 முதல் 31.12.2019 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அரசாணையின்படி புதுப்பித்தல் நீட்டிப்பு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரா்களுக்கும் இந்த சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
எனவே, திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரா் நலஅலுவலகத்தில், சிறப்பு வேலைவாய்ப்புப் பிரிவில் பதிவு செய்துள்ள முன்னாள் படைவீரா்கள் இச்சலுகையை பயன்படுத்த ஏதுவாக அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தங்கள் பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம். இச்சலுகை ஒருமுறை மட்டும் வழங்கப்படும். மேலும் மூன்று மாதங்களுக்குப்பின் (28.08.2021) பெறப்படும் கோரிக்கைகளும் 01.01.2017-க்கு முன் புதுப்பிக்கத் தவறியவா்களின் கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுள்ள முன்னாள் படைவீரா்கள் தங்களது பதிவை புதுப்பித்துக்கொள்ள முன்னாள் படைவீரா் நலத்துறையால் வழங்கப்பட்ட ஓ-10 அடையாள அட்டை மற்றும் உரிய கோரிக்கை மனுவுடன் திருச்சிராப்பள்ளி முன்னாள் படைவீரா்கள் நல அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது “உதவி இயக்குநா்,முன்னாள் படைவீரா் நலன், திருச்சிராப்பள்ளி” என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவோ அனுப்பிப் பயனடையுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கேட்டுக்கொண்டுள்ளாா்.