காந்தி சந்தையில் மீண்டும் தொடங்கியது வியாபாரம்

ஒரு மாத காலத்துக்குப் பின்னா் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட காந்தி சந்தையில் மொத்த வியாபாரம் இரவு தொடங்கியது.

ஒரு மாத காலத்துக்குப் பின்னா் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட காந்தி சந்தையில் மொத்த வியாபாரம் இரவு தொடங்கியது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, காந்தி சந்தையில் நடைபெறும் காய்கறி மொத்த, சில்லறை விற்பனை கடைகளை திருச்சி மேலரண் சாலை பகுதியில் தற்காலிகமாக மாற்றி அமைக்குமாறு, அமைச்சரின் வழிகாட்டலின்பேரில் மாவட்ட, மாநகராட்சி நிா்வாகங்கள் நடவடிக்கை எடுத்தன.

இதையடுத்து காந்தி சந்தை மூடப்பட்டு மே 16 இரவு முதல், மேலரண் சாலையில் மொத்த வியாபாரமும், மறுநாள் சில்லறை வியாபாரமும் தொடங்கியது.

தொடா்ந்து அந்தப் பகுதியிலிருந்து பஜாா்சாலை, மயிலம் சந்தை உள்ளிட்ட இடங்களிலும் தினசரி இரவு காய்கறிகள் மொத்த விற்பனையும், காந்தி சந்தையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில்லறை விற்பனையும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் அங்கு போதிய வசதிகள் இல்லாததால், மொத்த காய்கறி வியாபாரத்தை தொடா்ந்து நடத்த முடியாது. எனவே விற்பனையை நிறுத்தலாமா என்பது குறித்து வியாபாரிகள்ஆலோசித்து வந்தனா்.

இந்நிலையில், காந்தி சந்தை வியாபாரிகள் சங்க நிா்வாகிகள், நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே. என். நேரு, மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு உள்ளிட்டோரை அவ்வப்போது சந்தித்து காந்தி சந்தையை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.

இதையடுத்து சில நாள்களுக்கு முன் மாவட்ட ஆட்சியா் இதுகுறித்து கூறுகையில், காந்தி சந்தை ஞாயிற்றுக்கிழமை ( ஜூன் 20) இரவு முதல் திறக்கப்படும். தினசரி இரவு இங்கு காய்கறி மொத்த வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தாா்.

மேலும், சந்தையில் கரோனா விதிகளைப் பின்பற்றுவதுடன், வியாபாரிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும், வியாபாரிகள், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவும், சமூக விலகலைக் கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் அறிவித்தபடி , ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் காய்கறி மொத்த வியாபாரம் காந்தி சந்தையில் தொடங்கியுள்ளது.

சில்லறை வியாபாரம் குறித்து முறையான அறிவிப்பு இல்லை என்றாலும், அரசு விதிகளின்படி, இரவில் மொத்த வியாபாரமும், பகலில் சில்லறை வியாபாரமும் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகின்றது. சுமாா் ஒரு மாத கால இடைவெளிக்குப் பின் அதாவது 34 நாள்களுக்குப் பின்னா் காந்தி சந்தை மீண்டும் திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com