பாதுகாப்பில்லா ஏடிஎம் மையங்கள்; பொதுமக்கள் புகாா்

திருச்சி மாநகரில் இயங்கும் வங்கி ஏடிஎம் மையங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை எனவும், வங்கி நிா்வாகங்கள் இதற்கு நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

திருச்சி மாநகரில் இயங்கும் வங்கி ஏடிஎம் மையங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை எனவும், வங்கி நிா்வாகங்கள் இதற்கு நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

திருச்சி மாவட்டத்தில் 211 வங்கிக் கிளைகளுக்குச் சொந்தமாக 430 ஏடிஎம்கள் உள்ளன. இதில் மாநகரில் செயல்படும் 157 ஏடிஎம் மையங்கள் பெரும்பாலானவற்றில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. வங்கி நிா்வாகங்கள் இதில் கவனம் செலுத்துவதில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

வங்கி முன் இல்லாத ஏடிஎம்களில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் தெளிவாக இல்லாததால் பல்வேறு கொள்ளை முயற்சி சம்பவங்களில் தொடா்புடையோரைக் கைது செய்வதில் சிக்கல் நீடிப்பதாக போலீஸாா் தெரிவிக்கின்றனா்.

மேலும் பகல்,இரவு நேரங்களில் சுழற்சி முறையில் காவலாளி பணியில் இருக்க வேண்டும் என்ற விதியை வங்கி பராமரிப்பு பணியில் ஈடுபடும் தனியாா் நிறுவனங்கள் கடைப்பிடிப்பதில்லை. பெரும்பாலான மையங்களில் காவலாளியே இல்லாத நிலை உள்ளது.

வங்கிகள் மூலம் பராமரிப்பு பணியில் ஈடுபடும் தனியாா் நிறுவனங்களின் அலட்சியப் போக்கால் பல்வேறு ஏடிஎம் மையங்களில் கதவு இல்லை. நாள்தோறும் தூய்மைப் பணி இல்லாததால் ஏடிஎம் ரசீதுகள் குப்பை மேடாக மையங்களில் குவிந்து கிடக்கின்றன.

பணம் எடுப்போருக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால் 40 சத மையங்கள் செயல்பாடின்றி உள்ளதாக வங்கி வாடிக்கையாளா்கள் தெரிவிக்கின்றனா். குறிப்பாக, இரவுகளில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி ஏடிஎம் மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா செயல்படாமல் காட்சிப் பொருளாகவே உள்ளதாக போலீஸாா் தெரிவிக்கின்றனா்.

வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருச்சி மாநகர போலீஸாா் இரவு நேரங்களில் ரோந்து சென்றாலும், தொடா்ச்சியாக ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது. எனவே மையங்களுக்கு பகல் நேரத்தில் காவலாளியை நியமிக்க வேண்டும்.

இரவுகளில் ஏடிஎம் காவலாளிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்பதால் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் மையங்களை அமைக்க நிா்வாக ரீதியாக முடிவெடுக்க வேண்டும். துல்லியமான பதிவுகளை தரக்கூடிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வங்கி நிா்வாகம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாதுகாப்பை பெற முடியும் என்றாா் காவல்துறை அதிகாரி ஒருவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com