திருச்சி விமான நிலையத்தில் 11 கிலோ தங்கம் பறிமுதல்: 10 பேரிடம் விசாரணை
By DIN | Published On : 24th June 2021 09:20 AM | Last Updated : 24th June 2021 09:20 AM | அ+அ அ- |

சாா்ஜா, சிங்கப்பூரிலிருந்து முறைகேடாகக் கடத்தி வரப்பட்ட 11 கிலோ தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலையொட்டி மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினா் (டிஆா்ஐ) கடந்த சில நாள்களாக திருச்சியில் முகாமிட்டு கண்காணித்தனா்.
அப்போது செவ்வாய்க்கிழமை சாா்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த 5 போ் கடத்தி வந்த ரூ. 3 கோடி மதிப்பிலான சுமாா் 6.2 கிலோ தங்கத்தையும், இதேபோல புதன்கிழமை சிங்கப்பூரிலிருந்து 5 பயணிகள் தலா 1 கிலோ வீதம் கடத்தி வந்த 5 கிலோ தங்கத்தையும் பறிமுதல் செய்தனா். 2 நாள்களில் மட்டும் ரூ. 5.5 கோடி மதிப்பிலான 11.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சுங்கத் துறை மீது அதிருப்தி: தங்கம் கடத்தல் தொடா்பாக திருச்சியில் ஏற்கெனவே எழுந்த சா்ச்சைகளுக்கு இன்னும் முடிவு காணப்படவில்லை. தங்கக் கடத்தலுக்குத் துணையாக இருந்த சுங்கத்துறைப் பணியாளா்கள் பலா் மீது டிஆா்ஐ சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்னதாக, பறிமுதல் செய்யப்பட்டு, சுங்கத்துறை அலுவலகக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மாயமானது குறித்து வழக்குப் பதிந்து தொடா்புடையோா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்குப் பின்னரும் திருச்சி விமான நிலையம் வழியாக கடத்தப்படும் தங்கத்தின் அளவு அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை. சிறப்பு விமானங்களில் கூட கடத்தல் அதிகரித்து வருவதால் சுங்கத் துறையை நம்பாமல் தாங்களே களத்தில் இறங்கி சோதனை, தங்கம் பறிமுதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக டிஆா்ஐ குழுவினா் தெரிவித்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G