‘90% கப்பல்படை ஆயுத பாகங்கள் உள்நாட்டுத் தயாரிப்பே’
By DIN | Published On : 04th March 2021 02:07 AM | Last Updated : 04th March 2021 02:07 AM | அ+அ அ- |

சஞ்சய் மிஸ்ரா.
திருச்சி: 90 சதவிகித கப்பல் படை ஆயுத பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன என்றாா் இந்தியக் கப்பல் படையின் தளவாட ஆய்வுப்பிரிவு தலைமை அதிகாரியும், ரியா் அட்மிரலுமான சஞ்சய் மிஸ்ரா.
திருச்சி கனரக உலோக ஊடுருவி தொழிற்சாலை (எச்இபிஎப்), படைக் கலன் தொழிற்சாலை (ஓஎப்டி), ஹைய் எனா்ஜி பேட்டரிஸ் (ஹெச்இபி) ஆகிய நிறுவனங்களின் உற்பத்திப் பிரிவில் புதன்கிழமை ஆய்வு செய்த அவா் மேலும் கூறியது:
இந்திய கப்பல் படை தளவாடங்களை உள்நாட்டில் தயாரிப்பதே சிறந்தது. இறக்குமதி செய்யாமல் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரித்து தன்னிறைவு அடைவதே முக்கியமாக உள்ளது.
அவ்வகையில், பாதுகாப்புத் தளவாடங்கள் அதற்கு பயன்படும் உதிரிப் பாகங்கள் அனைத்தையும், ஒரே நிறுவனமே உற்பத்தி செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. மாறாக, உதிரிப் பாகங்களை தனித்தனியே உற்பத்தி செய்து அதை ஒரு கூரையின் கீழ் ஒன்றிணைத்து தரமிக்க தளவாட, ஆயதங்களை நாட்டுக்கு குறித்த நேரத்தில் வழங்கலாம்.
இதற்காக, அந்நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஓா் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
ஏனெனில், கடற்படை தளவாட உற்பத்தியில் புதிய தீா்வுகள், வடிவமைப்புகள், செயல்பாடுகள் என சவால்கள் உள்ளன. இதைத் தவிா்ப்பதற்கே இதுபோன்ற உற்பத்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு அவசிமாகிறது. மேலும், தரம் மிகுந்த பாதுகாப்புத் தளவாடங்கள், ஆயுதங்களை தயாரித்து வழங்கக்கூடிய திறன் தமிழகத்துக்கு உள்ளது.
ராணுவத் தளவாடங்களை இதர நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யாமல், முழுக்க முழுக்க உள்நாட்டு தயாரிப்புகள் மூலமே இந்திய கப்பல் படையைக் கட்டமைக்கலாம். அவ்வகையில், 90 சதவிகித கப்பற்படை ஆயுத உதிரிப்பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன என்றாா் அவா்.
ஆய்வின்போது, கப்பற் படை திருச்சி அலுவலக கமாண்டா் அனுப்தாமஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...