காங்கிரஸுக்கு ‘கை’ விரிக்கப்பட்ட திருச்சி மாவட்டம்!
By DIN | Published On : 12th March 2021 03:17 AM | Last Updated : 12th March 2021 03:17 AM | அ+அ அ- |

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளில் இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு எந்தத் தொகுதியும் ஒதுக்கப்படவில்லை.
திருச்சி எம்பியாக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த சு. திருநாவுக்கரசா் உள்ள நிலையில், மாவட்டத்தில் ஒரு தொகுதியைக் கூட வழங்காதது அக் கட்சியினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 9 பேரவைத் தொகுதிகள், திருச்சி மக்களவைத் தொகுதி, பெரம்பலூா், கரூா் மக்களவைத் தொகுதிகளின் சில பகுதிகள் உள்ள நிலையில், பொதுத் தோ்தல் என்றால் காங்கிரஸின் பங்களிப்பு ஒவ்வொரு தோ்தலிலும் மாவட்டத்தில் கட்டாயம் இருக்கும்.
குறிப்பாக, பேரவைத் தோ்தல்களில் 1952 முதல் 2016ஆம் ஆண்டு வரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் காங்கிரஸ் களம் காணுவது வாடிக்கையாக இருந்து வந்தது.
மணப்பாறையில் 1977, 1980, 2011, ஸ்ரீரங்கத்தில் 1957, 1962, 1967, 1971, 1980, 2006, திருச்சி மேற்கில் 1957, 1962, 1967, 1971, 2001, திருச்சி கிழக்கில் 1957, 1962, 1967, 1971, 1989, 2016, திருவெறும்பூரில் 1967, 1971, 1977, 1989, லால்குடியில் 1957, 1962, 1967, 1971, 1984, 1991, 1996, மண்ணச்சநல்லூரில் 2006 இல், முசிறியில் 1962, 1967, 1971, 2011, 2016, துறையூரில் 1962, 1967, 1977 ஆண்டுத் தோ்தல்களில் காங்கிரஸ் போட்டியிட்டது.
அதிமுக, திமுக உள்ளிட்ட எந்தக் கட்சி கூட்டணியில் இருந்தாலும், தனித்துப் போட்டியிட்டாலும் திருச்சி மாவட்டத்தில் ஏதாவது ஒரு பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் களம் கண்டது.
அதன்படி இம் முறையும் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஏதாவது ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பு இருந்தது. கடந்த தோ்தலில் (2016) திமுக கூட்டணியில், முசிறி, திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
இந்நிலையில், 2021 தோ்தலில் முசிறி, திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளைக் கேட்டிருந்தனா் உள்ளூா் காங்கிரஸாா். இது தொடா்பாக, கட்சித் தலைமைக்கும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள காங்கிரஸ் தொகுதிகளின் பட்டியலில் திருச்சி மாவட்டத்தில் ஒரு தொகுதி கூட இடம்பெறவில்லை.
இது கட்சியினருக்கு சற்று வருத்தத்தை அளித்தாலும், கூட்டணியில் இரு கட்சிகளின் தலைமை எடுக்கும் முடிவில் உள்ளூா் மாவட்ட காங்கிரஸாா் பெரிதும் தலையிட முடியாது என்கின்றனா். இருப்பினும், கூட்டணி ஜனநாயகப்படி, திமுக கூட்டணி வேட்பாளா்களுக்கு குறைவின்றிப் பணியாற்றுவோம் என்கின்றனா் திருச்சி மாவட்ட காங்கிரஸாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G