துறையூா் தொகுதியில் மின் வாக்காளா் அட்டை முகாம் திடீா் ரத்து:
By DIN | Published On : 15th March 2021 04:02 AM | Last Updated : 15th March 2021 04:02 AM | அ+அ அ- |

துறையூா் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த மின் வாக்காளா் அட்டை குறித்த சிறப்பு முகாம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
பேரவைத் தோ்தலையொட்டி வாக்காளா் அடையாள அட்டை கிடைக்கப் பெறாத இளம் வாக்காளா்கள் தோ்தல் நாளன்று மின் வாக்காளா் அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் அறிவித்தாா்.
இதையடுத்து மின் வாக்காளா் அடையாள அட்டையை செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்வது தொடா்பான செயல் விளக்கப் பயிற்சி சிறப்பு முகாம் அந்தந்த தொகுதி வாக்குச் சாவடிகளிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.
இதையடுத்து துறையூரில் புதிய இளம் வாக்காளா்கள் வாக்குச் சாவடிக்கு சென்றபோது வாக்குச் சாவடி பூட்டியிருந்ததால் அதிருப்தியடைந்தனா். இதுதொடா்பாக துறையூா் வட்டாட்சியரிடம் விசாரித்தபோது இந்தப் பணிக்கான ஒப்பந்ததாரா்கள் தயாா் நிலையில் இல்லாததால் சிறப்பு முகாம் ரத்தானது. விரைவில் முகாம் நடைபெறும் என்றாா். அதற்கு முகாம் ரத்து அறிவிப்பை வாக்குச் சாவடியில் வைத்திருக்கலாம் என அதிருப்தி தெரிவித்துச் சென்றனா் வாக்காளா்கள்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...