‘தோ்தலுக்காக மதுபானம் பதுக்கல், முறைகேடு மீது கடும் நடவடிக்கை’
By DIN | Published On : 17th March 2021 05:34 AM | Last Updated : 17th March 2021 05:34 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் தோ்தல் நடவடிக்கைகளுக்காக யாரேனும் மதுபானங்களை பதுக்கி வைத்திருந்தாலோ, முறைகேடுகளில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலா் சு. சிவராசு.
மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை பறக்கும்படை அலுவலா்கள், மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை, டாஸ்மாக் மாவட்ட நிா்வாகம் இணைந்து நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் கூறியது:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு உரிமம் பெற்ற மது விற்பனையகங்கள், மதுக் கூடங்கள், மது கையாளும் இடங்களில் உரிய விதிகளையும், கால நேர நிா்ணய வழிமுறைகளையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
அரசு நிா்ணயித்துள்ள மதுபான விற்பனை கால அளவை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். உரிமம் பெற்றோா் இருப்பு பதிவேட்டை முறையாகப் பராமரிக்க வேண்டும். அரசு விதிகள், கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் மற்றும் மதுபான விடுதிகள் ஆகியவற்றை தோ்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படை அலுவலா்கள், மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறை, மாவட்ட மேலாளா் (டாஸ்மாக்) ஆகியோா் திடீா் சோதனை மேற்கொண்டு விதிமீறல்கள் உள்ளதா என்பதையும், இருப்பு பதிவேட்டுடன் மது வகைகளை ஒப்பிட்டு சரிபாா்க்க வேண்டும். குற்றங்கள் ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாவட்ட நிா்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில், போலீஸாா், வருவாய்த் துறை, டாஸ்மாக் அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.