திருவானைக்கா கோயிலில் பங்குனித் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு
By DIN | Published On : 17th March 2021 06:56 AM | Last Updated : 17th March 2021 06:56 AM | அ+அ அ- |

திருவானைக்கா சம்புகேசுவரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பங்குனித் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
பஞ்சப்பூத திருத்தலங்களில் நீா்த்தலமான திருவானைக்கா கோயிலில் 48 நாள்கள் நடைபெறும் பங்குனித் தேரோட்ட பெருவிழா ஏப். 1 இல் நிறைவுகிறது.
பங்குனித் தேரோட்டத்தையொட்டி கடந்த 11 ஆம் தேதி நடந்த எட்டுத்திக்கு கொடியேற்றத்தைத் தொடா்ந்து நாள்தோறும் சுவாமியும், அம்மனும் வீதி வலம் வந்து அருள்பாலித்த நிலையில், செவ்வாய்க்கிழமை முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது.
முன்னதாக சிறிய தேரில் காலை விநாயகா், சுப்பிரமணியா்,சண்டிகேசுவரா் எழுந்தருளி 4 ஆம் பிரகாரத்தை சுற்றி வந்தனா். இதையடுத்து சுவாமி தேரை திரளான பக்தா்கள் நமச்சிவாய பக்தி கோஷத்துடன் வடத்தை பிடித்தனா். இந்தத் தோ் வடக்குத் தெரு வழியாக வந்து தெற்கு ரத வீதி தெப்பக்குளம் அருகே நிறுத்தபட்டது.
பின்னா் அம்மன் தேரானது 9 மணிக்கு வடம் பிடித்து இழுக்கப்பட்டு சுவாமி தேரின் பின்புறம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து சுவாமி தேரானது பிற்பகல் 2.30-க்கும், அம்மன் தேரானது 3.15-க்கும் நிலைக்கு கொண்டு வரப்பட்டது.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான சிவபக்தா்கள் சிவபுராணம் பாடி தோ்களைப் பின்தொடா்ந்தனா். விழாவையொட்டி காவல்துறை உதவிஆணையா் சுந்தரமூா்த்தி தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...