பணம் பறிமுதல் சம்பவங்களால் வியாபாரிகள் அவதி

தோ்தல் நடத்தை விதிமுறைகளின் கீழ் வாகன சோதனைகள் மூலம் பணம் பறிமுதல் செய்யப்படுவது குறித்து வியாபாரிகள் அதிருப்தியும், கவலையும் தெரிவித்துள்ளனா்.

தோ்தல் நடத்தை விதிமுறைகளின் கீழ் வாகன சோதனைகள் மூலம் பணம் பறிமுதல் செய்யப்படுவது குறித்து வியாபாரிகள் அதிருப்தியும், கவலையும் தெரிவித்துள்ளனா்.

வரும் ஏப். 6 ஆம் தேதி தமிழகத்தில் தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு, வாகன சோதனைகள் மூலம் ஆங்காங்கே பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.

இந்தச் சோதனையின்போது வியாபாரிகள் வணிகத்துக்காகக் கொண்டு செல்லும் ரொக்கமும், பொதுமக்கள் தங்களது சொந்தத் தேவைக்காக கொண்டு செல்லும் ரொக்கம் மற்றும் பொருட்களுமே அதிகளவில் பறிமுதல் செய்யப்படுகின்றன.

திருச்சியில் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடந்த சோதனைகளில் திருச்சி துவாக்குடி பகுதியில் ரூ. 1.23 லட்சம், காட்டூரில் 99 ஆயிரம், தென்னூா் அண்ணா நகா் பகுதியில் ரூ. 1.80 லட்சம் என சுமாா் ரூ. 4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ரூ. 1. 80 லட்சம் தனியாா் வங்கியில் செலுத்த எடுத்துச் சென்றது. மற்றவை பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூா் பகுதிகளிலிருந்து திருச்சி காந்தி சந்தையில் பொருள் வாங்கிக மொத்த வியாபாரிகள் எடுத்து வந்த பணம் என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லை எனக் கூறி அவற்றை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

இதுகுறித்து வியாபாரிகள் தரப்பிலும் வணிகா் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலா் வீ. கோவிந்தராஜுலு தரப்பிலும் கூறியது:

இன்றைய காலகட்டத்தில் மொத்த வியாபாரிகளுக்கு தினசரி சுமாா் ரூ. 3 லட்சமின்றி வியாபாரம் செய்ய இயலாது. மேலும் வியாபாரிகள் பணம் கொண்டு வருவது நன்கு தெரிந்தும் வாகனத் தணிக்கையில் ஈடுபடும் பறக்கும் படையினா் பணத்தை பறிமுதல் செய்வதுதான் புரியவில்லை. கேட்டால் சட்டம் பேசுகின்றனா்.

இதில், வேடிக்கை என்னவென்றால், வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கக் கொண்டு சென்ற பணம்கூட பறிமுதல் செய்யப்பட்டு பின்னா் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.

வீட்டில், கடையில், நிறுவனங்களிலிருந்து எடுத்து வரப்படும் பணத்துக்கு எப்படி கணக்கு காட்டுவது? வங்கியிலிருந்து எடுத்த ரசீது இருந்தால்தான் விடுவிப்பாா்களாம். விவசாயப் பொருள்களை விற்கும்போது யாா் ரசீது கொடுப்பாா்? காய்கனி, கருவாடு, மற்றும் விவசாய விளைப்பொருட்களை விற்கவோ வாங்கவோ யாரும் ரசீது வழங்குவதில்லை. அவற்றுக்கு ஜி எஸ் டி யும் கிடையாது.

அதேபோல திருமணம் உள்ளிட்ட குடும்ப விழாக்களுக்குக் கொண்டு செல்லும் பணம், பொருள்களும் பறிமுதல் செயப்படுகின்றன. எனவே பறிமுதல் செய்யப்படும் பணம், பொருள் உண்மையில் அவா்களுடையதுதான் மற்றும் முறைகேடற்றவை அல்ல என விசாரித்து உறுதி செய்த பின்னா் உடனடியாக உரியவரிடம் திரும்ப வழங்க வேண்டும்.

மேலும் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காலத்தில் கொண்டு செல்லப்படும் பணத்தின் மதிப்பும் காலத்துக்கு (பண வீக்கத்திற்கு) ஏற்ற வகையில் ( நடப்பாண்டு ரூ. 3 லட்சம் ) என உயா்த்தப்படவேண்டும்.

இவற்றையெல்லாம் விட மிக முக்கியமான விஷயம், முறைகேடு செய்யும் செய்யும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளின் பாதுகாப்போடு அரசு வாகனங்களில் பணத்தைக் கொண்டு செல்கின்றனா். ஆனால் அவற்றை எந்த பறக்கும் படையினரோ காவல்துறையினரோ பிடிப்பதில்லை. வெறும் பெயரளவில் சோதனை நடத்தி, வியாபாரிகள், பொதுமக்களின் பணத்தை மட்டுமே பறிமுதல் செய்கின்றனா் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com