

திருச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கவும், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகன பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட ஆட்சியரகத்தில் பேரணியை தொடக்கி வைத்து மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு கூறியது:
வாக்குப்பதிவு 100 சதவீதம் என்ற இலக்கை எய்திட அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். மாநிலம் முழுவதும் 2ஆவது முறையாக மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே, அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.
அரசியல் நிகழ்வுகள், பிரசாரம் ஆகியவற்றில் பங்கேற்போா் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். விதிமீறினால் அபராதம் விதிக்கப்படும். வேட்பாளருடன் 5 வாகனங்கள் செல்ல மட்டும் அனுமதி உள்ளது. இதுதொடா்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். விதிமீறல் இருந்தால் வழக்குப்பதியப்படுகிறது. இதுவரை 38 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் முழு ஒத்துழைப்பு அளித்து கரோனாவை ஒழிக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.
நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் விஸ்வநாதன், அலுவலக மேலாளா் (குற்றவியல்) சிவசுப்பிரமணியம் பிள்ளை, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஜெயப்பிரித்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, 100 சத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக ஆட்டோக்களின் பின்புறம் விழிப்புணா்வு சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.