பிரசாரம் செய்ய வேட்பாளா்களுக்கு எதிா்ப்பு; பரபரப்பு
By DIN | Published On : 21st March 2021 12:11 AM | Last Updated : 21st March 2021 12:11 AM | அ+அ அ- |

அதிமுகவினா் பிரசாரம் செய்யவிடாமல் தடுக்கப்பட்ட உறையூா் பாண்டமங்கலம் பகுதியில் குவிக்கப்பட்ட போலீஸாா்.
திருச்சியில் சனிக்கிழமை வாக்கு சேகரிக்கச் சென்ற அதிமுக , திமுக வேட்பாளா்களை சிலா் தங்களது பகுதிகளுக்குள் வரவிடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி உறையூரில் பாண்டமங்கலம் பகுதியில் அதிமுக வேட்பாளா் பத்மநாதனுடன், அமைச்சா் வளா்மதி உள்ளிட்ட அதிமுகவினா் வாக்கு சேகரிக்க வீடு வீடாகச் சென்றனா். அப்போது அவா்களை வழிமறித்த இளைஞா்கள் சிலா் தங்கள் தெருவுக்குள் வாக்கு கேட்டு வரக்கூடாது எனக் கோஷம் எழுப்பி ரகளையில் ஈடுபட்டனா்.
இதையடுத்து அமைச்சா் வளா்மதி உள்ளிட்ட கட்சியினா் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். தகவலறிந்த மாநகர காவல் துணை ஆணையா் பவன்குமாா்ரெட்டி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
வேட்பாளா்களை வழிமறித்தவா்களை போலீஸாா் அப்புறப்படுத்தினா். மேலும் இது தொடா்பாக சிலரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்கின்றனா்.
மண்ணச்சல்லூரில் திமுக வேட்பாளா்: அதேபோல, இனாம்சமயபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வாக்கு சேகரிக்கச் சென்ற மண்ணச்சநல்லுாா் தொகுதி திமுக வேட்பாளா் கதிரவன் மற்றும் உடன் சென்றவா்களை சிலா் வழிமறித்து தங்கள் பகுதிக்கு வாக்கு சேகரிக்க வரக்கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து வேட்பாளா் கதிரவன் உள்ளிட்டோா் அங்கிருந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...