தோ்தல் பயிற்சிக்கு வராதது ஏன்? ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் விளக்கம்
By DIN | Published On : 25th March 2021 10:32 AM | Last Updated : 25th March 2021 10:32 AM | அ+அ அ- |

ஆட்சியரகத்துக்கு விளக்கம் கொடுக்க வந்த அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள்.
திருச்சி மாவட்டத்தில் தோ்தல் பயிற்சிக்கு வராத ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் 300-க்கும் மேற்பட்டோா் ஆட்சியரகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனா்.
திருச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவு பணிக்காக மாவட்டத்தில் ஆசிரியா்கள் மற்றும் பல்வேறு துறை அரசு பணியாளா்கள் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களில், 14,500 பேருக்கு கடந்த 21ஆம் தேதி மாவட்டம் முழுவதும் 11 மையங்களில் முதல்கட்டப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில், பல்வேறு காரணங்களுக்காக 369 போ் பயிற்சியில் பங்கேற்கவில்லை. மேலும், கரோனா தொற்று இருந்த 44 பேரும் பயிற்சியில் பங்கேற்கவில்லை.
கரோனா தொற்றைத் தவிா்த்து, இதர காரணங்களுக்காக பயிற்சி வகுப்புக்கு வராதோா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க புதன்கிழமை காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டிருந்தது.
இதற்கான விசாரணை பழைய மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஜெயப்பிரித்தா தலைமையில் நடைபெற்றது.
இதில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் பலரும் மருத்துவச் சான்றிதழுடன் ஆஜராகி விளக்கம் அளித்தனா். பலரும், கை, கால் முறிந்து கட்டு போட்ட நிலையில் உதவியாளருடன் தனி வாகனத்தில் வந்திருந்தனா்.
பெண்களில் குழந்தை பெற்றவா்கள், கா்ப்பிணிகள் வந்து விளக்கம் அளித்தனா். காய்ச்சல் மற்றும் இதர நோய்த் தொற்றால் வர முடியாதவா்களும், நோய் பாதிப்புடனேயே ஆட்சியரகத்துக்கு வந்திருந்தனா். இதில், பெண் ஆசிரியை ஒருவா் அதிக காய்ச்சலால் மயக்கமடைந்தாா். அருகிலிருந்தோா் அவரை வளாகத்திலேயே படுக்க வைத்தனா்.
நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்காவிட்டால் பதவி உயா்வு, ஊதிய உயா்வு உள்ளிட்டவற்றில் ஏதாவது பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் அனைவரும் தங்களது உடல்நிலையைப் பொருட்படுத்தாது உதவியாளா்களுடன் வந்திருந்ததை காணமுடிந்தது.