மணப்பாறை அருகே எம்.எல்.ஏ. உறவினர் வீட்டிலிருந்து ரூ. 1 கோடி பறிமுதல்
By DIN | Published On : 29th March 2021 12:27 PM | Last Updated : 29th March 2021 12:37 PM | அ+அ அ- |

ரூ. 1 கோடி பணம் கண்டெடுக்கப்பட்ட வைக்கோல்போர்.
மணப்பாறை அருகே எம்.எல்.ஏ. உறவினர் வீட்டிலிருந்து ரூ.1 கோடி பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுபவர் அ.தி.மு.க எம்.எல்.ஏ. ஆர்.சந்திரசேகர். இவரது நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஜேசிபி ஓட்டுனர் வலசுப்பட்டியைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரது வீட்டிற்கு நள்ளிரவு சென்ற வருமான வரித்துறை இணை இயக்குநர் மதன்குமார் தலைமையிலான 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அழகர்சாமி வீட்டியிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் இருந்த வைக்கோல் போரிலிருந்து ரூ.500 நோட்டுகள் கட்டுக்கட்டாக எடுக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான பணத்தை பறிமுதல் செய்த வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய அழகர்சாமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் அருகில் உள்ள ஒப்பந்தகாரர் தங்கபாண்டியன், கோட்டைப்பட்டியில் ஆனந்த என்ற முருகானந்தம் ஆகியோர் வீடுகளிலும், தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் நள்ளிரவு சோதனை மேற்கொண்டனர்.
அந்த இடங்களில் பணம் ஏதும் கைப்பற்றவில்லை என கூறப்படுகிறது. மணப்பாறை பகுதியில் எம்.எல்.ஏ பணியாளர் வீட்டிலிருந்து ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.