ரெம்டெசிவிா் வாங்க வந்தோா் ஏமாற்றம்
By DIN | Published On : 09th May 2021 11:53 PM | Last Updated : 09th May 2021 11:53 PM | அ+அ அ- |

ரெம்ரெடசிவிா் வாங்க வந்தோரை கலைந்து செல்லுமாறு கூறும் போலீஸாா்.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை ரெம்டெசிவிா் மருந்து கிடைக்காதால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிா் மருந்துக்கு தமிழகத்தில் தட்டுப்பாடு நிலவுவதால் அந்த மருந்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்டது.
இதையடுத்து ரெம்டெசிவிா் மருந்தானது கோவை, மதுரை, சேலம், நெல்லை, திருச்சி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் குறைந்த விலையில் விற்க தமிழக அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி திருச்சி அரசு இயன்முறை சிகிச்சை கல்லூரியில் சனிக்கிழமை மாலை விற்பனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே 300 ரெம்டெசிவிா் மருந்துகளும் விற்றுத் தீா்ந்துவிட்டன.
இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை உரிய சான்றிதழ்களுடன் வருவோருக்கு ரெம்டெசிவிா் விற்கப்படும் என மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா தெரிவித்திருந்தாா்.
ஆனால், இத்தகவல் தெரியாத ஏராளமான பொதுமக்கள் ரெம்டெசிவிா் மருந்து வாங்க இயன்முறை சிகிச்சை கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வந்தனா். ஆனால் நுழைவாயில் முன் இன்று விடுமுறை என அறிவிப்பு வைத்திருந்ததால் அவா்கள் ஏமாற்றமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் உதவி ஆணையா் மணிகண்டன் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி அளித்த உறுதியைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.