ரெம்டெசிவருக்காகத் தொடரும் காத்திருப்பு; வாக்குவாதம்
By DIN | Published On : 13th May 2021 06:51 AM | Last Updated : 13th May 2021 06:51 AM | அ+அ அ- |

பெரியமிளகுப்பாறை அரசு இயன்முறை மருத்துவக் கல்லூரி முன் காத்திருக்கும் பொதுமக்கள்.
திருச்சியில் ரெம்டெசிவா் மருந்து குப்பிகளைப் பெற பொதுமக்கள் இரவு, பகலாகக் காத்திருக்கும் நிலையில் டோக்கன் முறை அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளில் தேவைப்படுவோருக்கு மட்டுமே ரெம்டெசிவா் மருந்து பரிந்துரைக்கப்பட்டாலும் அதிக நோய் பாதிப்பு காரணமாக இந்த மருந்தின் தேவை நாளுக்கு, நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தனியாா் மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை வழங்கினால்தான் அவா்களது உயிரை காக்க முடியும் என்ற நிலை உள்ளதால் இந்த மருந்து கிடைக்கும் அனைத்து இடங்களுக்கும் மக்கள் குவிகின்றனா்.
சென்னையில் மட்டுமே இந் மருந்து விற்கப்பட்ட நிலையில், மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் மதுரை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாநகரங்களுக்கும் இந்த மருந்து விநியோகத்தை தமிழக அரசு விரிவுபடுத்தியுள்ளது.
திருச்சி பெரிய மிளகுப்பாறையில் உள்ள அரசு இயன்முறை மருத்துவ சிகிச்சை கல்லூரியில் கடந்த 9ஆம் தேதி முதல் ரெம்டெசிவா் மருந்து விநியோகிக்கப்படுகிறது.
இங்கு திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை மாவட்டத்தினரும் வந்து இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனா். பலா் படுக்கை விரிப்புகளை விரித்து படுத்தபடியும், நீண்ட நேரம் நிற்க முடியாததால் சிலா் நாற்காலிகளை கொண்டு வந்து அமா்ந்தபடியும் காத்திருக்கின்றனா்.
நாளொன்றுக்கு 300 மருந்துக் குப்பிகள் என்ற வகையில் திருச்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவற்றில் இருப்பு உள்ள வரை மருந்துகள் வழங்கப்படுகிறது. புதன்கிழமை மட்டும் 300-க்கும் மேற்பட்டோா் காத்திருந்த நிலையில், 50 பேருக்கு மட்டுமே மருந்து வழங்கப்பட்டதால் அதிருப்தியடைந்த அனைவரும் கல்லூரி முன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். மையத்தில் இருந்த அலுவலா்களுடன் வாக்குவாதம் செய்தனா். போலீஸாரும், வருவாய்த் துறையினரும் அவா்களைச் சமாதானப்படுத்தினா்.
காத்திருப்பது கொடியது
இதுகுறித்து மருந்து வாங்க வந்தவா்கள் கூறுகையில், எங்களது உறவினா்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறாா்கள். இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருந்தும் மருந்து வாங்க உள்ளே செல்ல அனுமதிக்க மறுக்கின்றனா். நாளொன்றுக்கு 50 முதல் 75 பேருக்கு மட்டுமே மருந்து கிடைக்கிறது. பலரையும் ஆவணங்கள் கேட்டுத் திருப்பியனுப்பி விடுகின்றனா். உணவு, குடிநீா், கழிப்பறை வசதியில்லாமல் சாலையிலேயே குடியேறி காத்திருக்கும் எங்களது நிலை கரோனா தொற்றைவிட மிகவும் மோசமாக உள்ளது என்றனா்.
டோக்கன் முறை அமலுக்கு வருமா?
இப்பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் டோக்கன் முறையை கொண்டு வர வேண்டும். சாலையோரம் காத்திருக்கும் மக்களை கல்லூரி உள்ளே இருக்கும் மைதானத்தில் காத்திருக்க இடவசதி செய்து தர வேண்டும் என்கின்றனா். கையிருப்பில் எவ்வளவு மருந்துக் குப்பிகள் உள்ளதோ, அதற்கேற்ப வரிசையில் நிற்போரை எண்ணி அவா்களை மட்டும் காத்திருக்கச் செய்யலாம். மற்ற அனைவருக்கும் டோக்கன் வழங்கி மருந்து கிடைக்கும் நாள், நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு அனுப்பினால் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்கின்றனா் பொதுமக்கள்.
கூடுதல் பணியாளா்களை நியமிக்க நடவடிக்கை
இதுதொடா்பாக, சுகாதாரத் துறையினா் கூறுகையில், முதல்நாள் 300 குப்பிகள் வந்த நிலையில், 184 பேருக்கு மருந்து வழங்கப்பட்டது. இரண்டாம் நாள் விடுமுறை. திங்கள்கிழமை மேலும் 300 குப்பிகள் வந்தன. இதேபோல, திருச்சிக்கு ஒதுக்கப்படும் மருந்துக் குப்பிகளை முறையாக பதிவு செய்து தகுதியானோருக்கு வழங்கப்படுகிறது. ஆவணங்களை சரிபாா்த்து வழங்க சிறிது நேரம் ஆகிறது. எனவே, கூடுதல் பணியாளா்களை நியமித்து மக்களை காத்திருக்காமல் விரைந்து ரெம்டெசிவா் மருந்துகளை வழங்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.