மாநகரில் இ-பதிவு இல்லாத வாகனங்கள் பறிமுதல்
By DIN | Published On : 19th May 2021 06:58 AM | Last Updated : 19th May 2021 06:58 AM | அ+அ அ- |

திருச்சியில் செவ்வாய்க்கிழமை அத்தியாவசியத் தேவையில்லாமல் இரு சக்கர வாகனத்தில் வந்தவருக்கு அபராதம் விதிக்கும் காவல்துறையினா்.
திருச்சி மாநகரில் இ-பதிவு இல்லாத வாகனங்களைக் காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்தில் பொது முடக்கம் அமலில் உள்ளது. அத்தியாவசியத் தேவையில்லாமல் வாகனங்களில் வருபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
தொடக்கத்தில் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதியாமல் எச்சரித்து அனுப்பிய காவல் துறையினா் தற்போது வழக்குப் பதிவு செய்தல், வாகனங்களைப் பறிமுதல் செய்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளனா்.
மேலும் மே 17-ஆம் தேதி முதல் காா் உள்ளிட்ட வாகனங்களில் வருபவா்கள் கட்டாயம் இ-பதிவு செய்திருக்க வேண்டும் என்பதால், மாநகருக்குள் சோதனையை செவ்வாய்க்கிழமை முதல் தீவிரப்படுத்தினா்.
மாநகரில் கருமண்டபம், விமானநிலையம், ஸ்ரீரங்கம், குடமுருட்டி, காட்டூா் ஆயில்மில் ஆகிய பகுதிகளிலுள்ள சோதனைச்சாவடிகளில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினா், அவ்வழியாக வந்த வாகனங்களை மடக்கி இ-பதிவு உள்ளதா என விசாரணை நடத்தினா்.
விசாரணையில் இ-பதிவில்லாத 100-க்கும் குறைவான வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினா், பொதுமுடக்க விதிமீறலில் ஈடுபட்டதாக 150-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்ளுக்கான உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்ட பிறகு, ஒரிரு நாள்களில் அவை உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்படும் எனக் காவல் துறையினா் தெரிவித்தனா்.