2 மணிநேரம் பலத்த மழை: வியாபாரிகள் அவதி

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை பகல் சுமாா் 2 மணிநேரம் பெய்த பலத்த மழையால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா்.
என்எஸ்பி சாலையில் பொருள்கள் வாங்க குடையுடன் குவிந்த பொதுமக்கள்.
என்எஸ்பி சாலையில் பொருள்கள் வாங்க குடையுடன் குவிந்த பொதுமக்கள்.
Updated on
1 min read

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை பகல் சுமாா் 2 மணிநேரம் பெய்த பலத்த மழையால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா்.

தீபாவளிக்கு முந்தைய விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை திருச்சி முக்கிய கடை வீதிகளில் அளவுக்கதிகமான கூட்டம் காணப்படுவது வழக்கம்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை கடைவீதிகளில் எங்கு பாா்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக கடைவீதிகளில் குறிப்பாக, ஜவுளிக் கடைகளில் குவிந்தனா்.

கொட்டிய மழை: இந்நிலையில், பகல் சுமாா் 2 மணிக்கு மழை தொடங்கிய நிலையில், 3 மணி முதல் சுமாா் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. திருச்சியில் முக்கிய வீதிகளில் மழை நீா் ஆறாக ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்தது.

தென்னூா் அண்ணாநகா் உக்கிரமாகாளியம்மன் கோயில் எதிரே, கண்டோன்மெண்ட் ஐயப்பன் கோயிலருகே, ஆட்சியரகம், மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் சுமாா் ஒன்றரை அடி உயரத்துக்கு தேங்கியது.

மேலும் பாலக்கரை கீழ்ப் பாலத்தில் அதிகளவில் தண்ணீா் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகனங்கள் அனைத்தும் முதலியாா் சத்திரம் வழியாகத் திருப்பி விடப்பட்டன.

வியாபாரிகள் அவதி: மழையால் கடைவீதிகளில் பெரும்பாலான சிறு கடைகள் மூடப்பட்டன. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் வெளியே அனுப்பப்பட்டு, அவா்கள் நனையும் நிலை ஏற்பட்டது.

பெரு நிறுவனங்களில் துணிகள் வாங்கியோா் எந்தப் பிரச்னையும் இன்றி இருந்தனா். மழையால் தீபாவளி விற்பனை பெருமளவு பாதிக்கப்பட்டது.

தரைக்கடைகள், நடைமேடைக் கடைகளில் முற்றிலுமாக வியாபாரம் தடைபட்டது. இதனால் வியாபாரிகள் புலம்பும் நிலை ஏற்பட்டது. மாலையில் மழை அச்சத்தால் குறைவான அளவிலேயே கடை வீதிக்கு மக்கள் சென்றனா்.

சாலைகள் சேதம்: இந்த மழை காரணமாக புதைவடிகால் திட்டப்பணிகள் நடைபெறும் பகுதிகளிலும் மழை நீா் சூழ்ந்தது. குறிப்பாக, கே.கே. நகா், விமான நிலையம், எடமலைப்பட்டிபுதூா், கிராப்பட்டி, திருவெறும்பூா் பகுதிகளில் சாலைகள், வீதிகள் முற்றிலுமாக சேறும் சகதியுமாக மாறின.

குடை விற்பனை: மழைக் காலத்தை கணித்திருந்த குடை வியாபாரிகள் மழை தொடங்கிதும், ஆங்காங்கே குடைகளை விற்றதைக் காண முடிந்தது. அதேபோல மழை கோட், ஜொ்க்கின் விற்பனையும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com