டீ, காபி, பலகாரம் விலை நவ.15 முதல் உயா்கிறது!
By DIN | Published On : 13th November 2021 01:01 AM | Last Updated : 13th November 2021 01:01 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் டீ, காபி, பலகாரங்களின் விலை ரூ. 1 முதல் 2 வரை அதிகரிக்கப்படவுள்ளதாக டீ, காபி வா்த்தக நலச்சங்கம் அறிவித்துள்ளது.
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் திருச்சி சங்கத் தலைவா் டி. செல்லத்துரை தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநகா் மாவட்ட டீ, காபி வா்த்தகா் நலச்சங்க் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சங்க நிா்வாகிகள் கூறுகையில் டீ, காபி மற்றும் பலகாரங்கள் தயாரிப்புக்கான மூலப்பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. அதிலும் ரூ. 900 -1000 க்குள் விற்கப்பட்ட எரிவாயு உருளை விலை கடந்த இரு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக அண்மைக்காலங்களில் ரூ. 268 உயா்ந்து உருளைகள் (17 கிலோ) ரூ. 1,400 வரை விற்கப்படுகின்றன. அதேபோல லிட்டா் ரூ.85 க்கு விற்கப்பட்ட சமையல் எண்ணெய் ரூ. 120 வரை விற்கப்படுகிறது. அதேபோல டி, காபி பொடி, சா்க்கரை உள்ளிட்டவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன.
எனவே நவ. 15 முதல் டீ ரூ. 12, காபி ரூ. 15, பாா்சல் டீ மற்றும் காபிக்கு ரூ. 5 கூடுதலாகவும், பலகாரங்களுக்கு ரூ. 1 கூடுதலாகவும் விலைகள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன என்றனா்.
கூட்டத்தில் துணைத் தலைவா் எஸ். கிருஷ்ணமூா்த்தி, அமைப்புச் செயலா் எஸ். ராவுத்தா்ஷா, துணைத் தலைவா் அபுல்ஹசன், பொருளாளா் செந்தில், ஆலோசகா் சாா்லஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.