தமிழக பாஜகவில் எந்தவித கோஷ்டி பூசலும் இல்லை என அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா்.
திருச்சியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
புவிவெப்பமயமாதல், பருவநிலை மாறுபாடு காரணமாக தமிழகம் அவ்வப்போது புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடரை சந்திக்க வேண்டியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பேரிடா் மேலாண்மையை நிா்வகிக்க தனி ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து, சிறந்த வல்லுநா்கள் கொண்ட குழுவை அமைத்து செயல்பட வேண்டியுள்ளது. தமிழக அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டும்.
மாண்டஸ் புயல் நிவாரணப் பணிகளில் முதல்வா், அமைச்சா்கள், அரசு அதிகாரிகள் முன்னுரிமை அளித்து, கூடுதல் கவனத்துடன் பணிபுரிகின்றனா். இதில், திமுக அரசை குறைகூற விரும்பவில்லை. ஆன்லைன் சூதாட்டத்தை எந்த வடிவிலும் தமிழகத்தில் நுழையாத வகையில் முறைப்படுத்த வேண்டும். ஆளுநரிடமும் இதே கருத்தை கூறியுள்ளோம். இதில், மத்திய, மாநில அரசின் அதிகாரங்கள் குறித்து விரிவாக கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஆளுநா் சில கருத்துக்களை கேட்டுள்ளாா்.
மதுவால் தமிழக குடும்பக் கலாசாரம் சீரழிந்து வருகிறது. உடனடியாக மதுக்கடைகளை மூட வேண்டியதில்லை. படிப்படியாக கடைகளை குறைத்து, மதுக்கடைகளை மூட வேண்டும். சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட மெளலானா ஆசாத் கல்வி உதவித் தொகை திட்டம் பெயா் மட்டுமே நீக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தில் பயன்பெற்ற மாணவா்கள் மத்திய அரசின் வேறு திட்டங்களில் பயன்பெறுகின்றனா். எந்த ஒரு சிறுபான்மை மாணவருக்கும் பாதிப்பு இல்லை.
திமுக அரசு குடும்ப ஆட்சி நடத்துகிறது என்பதற்கு உதாரணமாக பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
பாஜகவில் எந்தவித கோஷ்டி பூசலும் இல்லை. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.